2009-10-15 16:58:46

2009ம் ஆண்டில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுகின்றனர், ஐ.நா.


அக்15,2009 தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகின் பசிக்கொடுமையை அதிகரித்துள்ளவேளை, இவ்வாண்டில் உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.

உலக உணவு தினம் இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, ஐ.நா.வின் உணவு நிறுவனமும், உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய பொருளாதார சிக்கல் துவங்கும்வரை ஊட்டச்சத்துக்குறைவால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளன.

எனினும் தற்போது உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துவிட்டதாகவும், மக்களின் ஊதியம் குறைந்து வருவதாகும் அவ்வறிக்கை கூறுகிறது.

உலகில் ஊட்டச்சத்துக்குறைவால் வாடும் அனைவருமே வளரும் நாடுகளில் வாழ்வதாகவும், ஆசியாவிலும் பசிபிக்கிலும் இவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 20 இலட்சம் எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

இவ்வெண்ணிக்கை, ஆப்ரிக்காவையடுத்த சஹாராவில் 26 கோடியே 50 இலட்சம், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 5 கோடியே 30 இலட்சம், அண்மை கிழக்கு மற்றும் வடஆப்ரிக்காவில் 4 கோடியே 20 இலட்சம், வளர்ந்த நாடுகளில் ஒரு கோடியே 50 இலட்சம் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது

பொருளாதார சுருக்க நிலை பெரிய அளவில் இருப்பதால், உள்ளூர் நாணய மதிப்பை குறைப்பது, வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி போன்ற பாரம்பரிய முறைகள் பயனளிக்கவில்லை என்று ஐ. நா கூறியுள்ளது.

அதே நேரம் சர்வதேச உதவி நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆய்வு மையங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு பட்டினியைக் குறைக்க சிறந்த வழி பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதுதான் என்று கண்டறிந்துள்ளது.
குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்ற வருடாந்திர ஆய்வு, பெண்களுக்கு கூடுதல் கல்வியும், கூடுதல் வேலை வாய்ப்புக்களும் கிடைத்தால் அது குழந்தைகளுக்கு அதிக அளவு போஷாக்கை அளிக்க பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.