2009-10-14 16:13:49

ஈராக் 1600 ஆண்டுகளாக மறைசாட்சிகளின் பூமி - கிர்குக் பேராயர்


அக்.14,2009 ஏறத்தாழ 1600 ஆண்டுகளாக மறைசாட்சிகளின் பூமியாக இருந்து வரும் ஈராக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைக்கு மத்தியிலும் தூய ஆவியிலும் திருநற்கருணையிலும் தங்கள் பலத்தைக் கண்டு வருகிறார்கள் என்று அந்நாட்டு பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக இறந்ததன் 1600ம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கியுள்ளவேளை, அது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அந்நாட்டு கிர்குக் பேராயர் சாக்கோ இவ்வாறு கூறினார்.

கடந்த கால மற்றும் தற்போதைய தொடர் வன்முறைகளைக் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்டாலும் அவர்களின் புனித வரலாறும் பயணமும் தடைபடாமல் சென்று கொண்டிருப்பதற்கு அவர்களின் ஆழமான விசுவாசமே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒருவராக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிர்குக் உயர்மறைமாவட்டம், இப்புதனன்று அமைதிக்கான நோன்பு கடைபிடிக்கின்றது. இவ்வியாழனன்று மறைசாட்சிகளைப் புகழ்வதில் செலவழிக்கின்றது. இவ்வாறு ஒரு வாரம் முழுவதும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் வழியாகக், கிர்குக் கிறிஸ்தவர்கள் தங்களின் விசுவாசம், அன்பு, நம்பிக்கை, திறந்த உள்ளம் ஆகியவற்றுக்குச் சான்று பகர விரும்புகிறார்கள் என்றும் பேராயர் கூறினார்.
ஈராக்கில் கி.பி. 409ம் ஆண்டுவாக்கில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களின் விசுவாசத்திற்காகத் தலைவெட்டப்பட்டு மறைசாட்சிகளாக இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.