2009-10-13 17:39:58

விவிலிய தேடல்:  


லூக். 19, 1-10

இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.



இயேசு உருமாறியப் புதுமையைப் போன வார விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்த வாரம், இயேசு உருமாற்றியப் புதுமையைப் பற்றி சிந்திக்க உங்களை அழைக்கிறேன். இயேசு உருமாறியதைப்  புதுமையாகப் பார்த்ததுபோல், இந்த வாரம் இயேசு சக்கேயுவைச் சந்தித்ததை, அவரை உருமாற்றியத்தை ஒரு புதுமையாகப் பார்க்கும்படி உங்களை அழைக்கிறேன்.

இந்த நிகழ்வை நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். இயேசு எரிக்கோ நகரில் நடந்து போய் கொண்டிருக்கிறார். அவரது புகழ் பரவி வந்ததால், அவரைச் சுற்றிக் கூட்டம் வழக்கம் போல் அலை மோதியது. இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களுக்குப் பல்வேறு நோக்கங்கள். இயேசுவிடம் அற்புதம் பெறக்கூடும் என்ற ஏக்கம், அவரிடம் என்னதான் இவ்வளவு ஈர்ப்பு என்று பார்க்கும் ஆர்வம், அவர் செய்வதில் குற்றம் கண்டு பிடிக்கும் ஆவல்... இப்படி பல நோக்கங்கள்.

இந்தக் கூட்டத்தின் கண்டனங்களுக்கு தங்கள் நண்பனை ஆளாக்காமல், யேசுவிடம் கொண்டு செல்ல, ஓட்டைப் பிரித்தனர் அவன் நண்பர்கள்.

இந்தக் கூட்டம் தன்னைக் கல்லெறிந்து கொன்றாலும் பரவாயில்லை அவரது ஆடையின் விளிம்புகளைத் தொட்டால் போதும் என்று துணிவுடன் வந்தார் இரத்தக் கசிவு நோயுள்ள பெண்.

இன்று கூட்டத்தைச் சமாளிக்க சக்கேயு என்ற ஒருவர் வேறொரு வழியைத் தேடுகிறார்.

சக்கேயுவை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.

அவர் செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர், குள்ளமான மனிதர்...

நான் அவர் இவர் என்று சக்கேயுவைப் பற்றிக் கூறுவதை இஸ்ராயலர்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர், மன்னிக்கவும், அவன் ஒரு பாவி, துரோகி.

இஸ்ராயலர் ரோமை அரசின் அடிமைகள். வாழ்வது தங்கள் சொந்த நாடானாலும், ரோமையர்களுக்குத் தொடர்ந்து வரி செலுத்த வேண்டிய கட்டாயம். சொந்த நாட்டிலேயே அந்நியனுக்கு வரி செலுத்தி வந்ததால் ரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு.

இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கு வந்து, பின்னர் நம் நாட்டை சொந்தம் கொண்டாடி, நம்மைப் பலவகையிலும் சுரண்டிய ஆங்கிலேயர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் மீது நம் முன்னவர் அதிக வெறுப்பு கொண்டனர். ஆனால், அதைவிட அதிக வெறுப்பை இன்னொரு கும்பல் மீது நம் முன்னவர் கொண்டிருந்தனர். யார் இவர்கள்? ஆங்கில அரசுக்கு வரி வசூலித்துத் தந்த நம் இந்தியர்கள். ஆங்கிலேயரின் அடி வருடிகளான இவர்கள் மேல் இருந்த வெறுப்பு மிக, மிக அதிகம்.

அதே நிலைதான் இஸ்ராயலர்கள் மத்தியிலும். ரோமையருக்கு வரி வசூல் செய்த யூதர்களை அவர்கள் அவலச் சொற்களால் தினமும் அர்ச்சித்தனர். பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், நாசக் காரர்கள்... ப்ரூட்டஸ்கள்... இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. நேரம் கருதி இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

சக்கேயு வரி வசூலிக்கும் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்தத் தொழிலை அவர் தானாகவே தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? என்னைப் பொறுத்தவரை, சக்கேயு இந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஏன் அப்படிக் கூறுகிறேன்? காரணம்...சக்கேயு குள்ளமாய் இருந்தார்.

பிறந்த குடும்பத்திற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு?

முழங்கால், மொட்டைத்தலை முடுச்சா?

சக்கேயு பிறந்தது முதல் மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளானவர். அதனால், அவரால் வளர முடியவில்லை.

குழந்தைப் பருவத்தில் அரவணைப்பு, அன்பு இவை கிடைப்பதற்குப் பதில், கோபம், வெறுப்பு இவை அதிகம் கிடைத்தால், அந்தக் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது அறிவியல் உண்மை.

உடல் அளவிலும், உள்ளத்திலும் நல்ல சொற்கள், நல் அதிர்வுகள் அக்குழந்தைக்குப் போய் சேரும் போது, குழந்தை நலமுடன் வளரும். சக்கேயு ஒருவேளை குழந்தைப் பருவத்திலிருந்து வெறுப்பை, கோபத்தை அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அதிகமாய் உணர்ந்திருக்க வேண்டும். எனவே அதிகமாய் வளரவில்லை.

சமுதாயம் அவரைப் பாவி என்றும், துரோகி என்றும் குட்டிக் கொண்டே இருந்ததால், குனிந்து போனார், குள்ளமாய்ப் போனார்.

இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார் என்று நற்செய்தி கூறுகிறது. வெறும் ஆர்வக் கோளாறு. ஒரு பார்வையாளரின் மன நிலைதான். அனால் முடக்குவாதக் காரனின் நண்பர்களைப் போலவோ, நோயுள்ளப் பெண்ணைப் போலவோ கூட்டத்துடன் மோதுவதற்கு சக்கேயு விரும்பவில்லை. கூட்டத்துக்குப் போனால், மீண்டும் வசை சொற்கள், வெறுப்பு என்று சந்திக்க வேண்டி வரும். ஒதுங்கி நின்று, எட்டிப் பார்த்து... ஒன்றும் பயனில்லை. இயேசு அவர் வாழ்ந்த மாடி வீட்டு பக்கம் வந்தால், மாடியில் நாற்காலி போட்டு, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு தன் வீட்டைக் கடந்து போவதைப் பார்த்திருக்கலாம். மாடியிலிருந்து பார்த்திருந்தால், ஏசுவும், அந்தக் கூட்டமும் குள்ளமாகத் தெரிந்திருக்கும். ஊர் மக்களைக் குள்ளமாய் பார்ப்பதில் சக்கேயுவுக்கு ஒரு தனி திருப்தி.

ஆனால், அதற்கு வழி இல்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம் ஏழைகள் வாழும் பகுதியாக இருந்தது. தன்னுடை தன்மானத்தை, தற்பெருமையைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு, சக்கேயு யேசுவைத் தேடி வருகிறார். வெறும் ஆர்வம்தான் அவரை யேசுவிடம் கொண்டு வந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமைக்கு மீண்டும் ஒரு மூட்டை கட்டி விட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார், சக்கேயு. இது சக்கேயுவின் பயணம்.

இனி இயேசுவின் பயணம்.

எரிக்கோ வீதிகளில் இயேசு நடந்து வரும் போது, நிமிர்த்து பார்க்கிறார்.  தூரத்தில் ஒரு மரத்தின் மீது நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். இயேசுவுக்கு வியப்பு.

சிறுவர்கள் மரமேறி அமர்வது சாதாரண விஷயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மன நிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர் போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறி...? இயேசுவுக்கு அவரைப் பற்றி அறிய ஆர்வம். அருகில் இருந்தவர்களிடம் கேட்கிறார். அவர் யார்? கூட்டத்தில் ஒரு சிலர் இயேசு காட்டிய மனிதரைப் பார்க்கின்றனர். கோபம், வெறுப்பு, கேலி அவர்கள் பதிலில் தொனிக்கின்றன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி." அவரைப் பற்றியக் குற்றப் பட்டியல்தான் அவர்களிடம் எப்போதும் கைவசம் இருந்ததே. இயேசு அந்தப் பட்டியலை ஒதுக்கிவிட்டு, அவர் பெயரைக் கேட்கிறார். யாருக்கும் அவர் பெயர் தெரியவில்லை. பாவி, துரோகி என்று அடை மொழிகளாலேயே அவரை இதுவரை அழைத்து வந்ததால், அவருடையப் பெயர் யாருக்கும் நினைவில் இல்லை.

இயேசு விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு அந்த மரத்திற்கு கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார்.

புதுமை ஆரம்பமானது.

மக்கள் தனக்குக் கொடுத்திருந்த ஆடை மொழிகளால், தன் பெயரைத் தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. இன்னொரு யூதர் தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயுவின் மனதைப் பூட்டியிருந்த சிறைகள் திறந்தன. சங்கிலிகள் அறுந்தன. அவருக்கு உருமாற்றம் உண்டானது.

மற்றவர்களுடையப் பெயர்களைக் கற்றுக் கொண்டு, அவர்களைப் பெயர் சொல்லி அல்லது செல்லப் பெயர் சொல்லி அழைக்கும் போது, உறவுகள் பலப்படுவதையும், உறவுகள் ஆழப்படுவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

கூட்டத்தில் ஒருவர் நம்மைப் பெயர் சொல்லி அழைத்தது... மேடையில் நம் பெயர் அறிவிக்கப்பட்டது... நண்பர்கள் நம் பெயருக்குத் தந்த மாற்றங்கள்... வீட்டில், அம்மா, அப்பா என்று ஒவ்வொருவரும் நம் பெயரில் ஏற்படுத்திய மாற்றங்கள்... இப்படி, பெயர் சொல்லி அழைப்பது பற்றி பல கோணங்களில் சிந்திக்கலாம். இன்று நேரம் இல்லை.

முன் பின் தெரியாத ஒருவர், அதுவும் தான் பிறந்த நேரம் முதல், தன்னை பழி சொல்லால் வதைத்து வந்த தன் குலத்திலிருந்து வந்த ஒருவர், தான் தேடிச் சென்ற ஒருவர், தன்னைத் தேடி வந்து, தன் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு உருமாற்றம் அடைந்தார். உடல் மாறியதா? தெரியவில்லை. மனம் வெகுவாக மாறியது.

அன்பர்களே, விவிலியம், கிறிஸ்தவ பாரம்பரியம் இவற்றில் மனம் மாறியவர்களைப் பற்றி பல கருத்துக்கள் கேட்டிருக்கிறோம்.

சக்கேயுவின் மன மாற்றத்தில் ஒரு தனி சிறப்பு உண்டு.

"ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான தர்மம் செய்வேன்." என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் சக்கேயு. அதையும் மன மாற்றம் என்று சொல்லியிருப்போம். ஆனால், சக்கேயுவின் கூற்று இவற்றை விட, மிகத் தெளிவாக இருந்தது.

"ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் எழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்."

பாதி சொத்து ஏழைகளுக்கு... ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம்.

இந்த சொற்களைச் சக்கேயு விருந்தின் போது 'எழுந்து நின்று' சொன்னதாக நற்செய்தி சொல்கிறது. யேசுவிடம் தனிப்பட்ட விதத்தில் முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... ஏறக்குறைய, கூரை மீது ஏறி நின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி. இந்த மாற்றத்தை உருவாக்கியது இயேசு. அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த அந்த பரிவு, அன்பு... புதுமை.

பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்:

ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமானால், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர் மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் அடைமொழிகளை, கண்டன அட்டைகளை கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.







All the contents on this site are copyrighted ©.