2009-10-13 15:12:38

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பயணம் : உரோம் யூதத் தொழுகைக் கூடம், ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்


அக்.13,2009 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் யூதத் தொழுகைக் கூடத்திற்கு முதன் முறையாக வருகிற ஜனவரியில் செல்லவிருக்கிறார் என்று திருப்பீடம் இச்செவ்வாயன்று அறிவித்தது.

ஏறத்தாழ 110 கோடி உரோமன் கத்தோலிக்கருக்குத் தலைவராக இருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இப்பயணம், 2010ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இடம் பெறும் என்று திருப்பீடம் மேலும் அறிவித்தது.

வரலாற்றில் உரோம் யூதத்தொழுகைக் கூடத்திற்குச் செல்லும் இரண்டாவது திருத்தந்தையாக இருப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இதற்கு முன்னதாக 1986ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும், வருகிற நவம்பர் 18 முதல் 23 வரை உரோமையிலுள்ள ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் நடத்தும் உணவுப் பாதுகாப்பு குறித்த 36வது உலக மாநாட்டை முன்னிட்டு நவம்பர் 16ம் தேதி அந்நிறுவனத்திற்குச் செல்லவிருக்கிறார் திருத்தந்தை எனவும் திருப்பீடம் இச்செவ்வாயன்று அறிவித்தது.










All the contents on this site are copyrighted ©.