2009-10-13 15:13:27

உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவூட்ட வேண்டுமானால் அடுத்த 40 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும்


அக்.13,2009 உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவூட்ட வேண்டுமானால் அடுத்த 40 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்

அறிவித்தது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 670 கோடியாக இருக்கும் தற்போதைய உலக மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் பாதியில் 910 கோடியாக உயரும் என்றும் விவசாயத்திற்கென இன்னும் அதிகமான நிலங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், 2050ம் ஆண்டுக்குள் 37 கோடிப் பேர் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளங்கள் மற்றும் பஞ்சங்களை உள்ளடக்கிய வெப்பநிலை மாற்றமும் உணவு உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

2050ல் உலகுக்கு எவ்வாறு உணவூட்டுவது என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டின் பிரதிநிதிகளிடம் இவ்வாறு அறிக்கை சமர்ப்பித்த ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைவர் ஜாக் தியோப், நிலம், நீர், உயிரியல் கூறுகள் போன்ற இயற்கை வளங்கள் குறைவுபடுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

வெப்பநிலை மாற்றம், உணவு உற்பத்தியை ஆப்ரிக்காவில் 30 விழுக்காடும் ஆசியாவில் 21 விழுக்காடும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.



காலநிலை மாற்றமும், நிலங்களில் பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அவ்வறிக்கை கூறுகின்றது.

உணவு விநியோகம் மிகவும் மோசமாக குறைவதை தடுப்பதற்கான முடிவுகள் இப்போதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகின்றது.








All the contents on this site are copyrighted ©.