2009-10-12 13:36:42

அருட்திரு தமியான் உள்ளிட்ட ஐந்து புனிதர்களும் கிறிஸ்தவ அன்புக்கு எடுத்துக்காட்டுகள், திருத்தந்தை


அக்.12,2009 ஹவாய்த் தீவில் தொழுநோயாளர் மத்தியில் சேவையாற்றி அந்நோயினால் இறந்த 19ம் நூற்றாண்டு பெல்ஜிய நாட்டு மறைபோதகர் அருள்தந்தை தமியான் தெ வூஸ்டர் உட்பட ஐந்து அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவித்து அவர்கள் கிறிஸ்தவ அன்புக்கு சுடர்விடும் மாதிரிகைகள் என்று அழைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் விழாத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இப்புனிதர்கள், மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு மனமாற்றம் மற்றும் சுயதியாகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாய் வாழ்ந்துள்ளார்கள் என்று கூறினார்.

புனித தமியான், தொழுநோயாளர்களுடன் ஒரு தொழுநோயாளியாக தனது இறப்புவரை வாழ்ந்தார் என்று கூறிய திருத்தந்தை, இன்றும் நம் சகோதர சகோதரிகளின் மனிதத்தை உருவிழக்கச் செய்யும் இந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மத்தியில் பணி செய்வதற்கு இவரது வாழ்வு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.

மேலும், முதியோருக்கென தனது பணியை அர்ப்பணித்த புனித ஜான் ஜூகன், நவீன சமூகங்களுக்கு ஒளிகாட்டும் வழிகாட்டியாக இருக்கிறார், இப்புனிதை முதியோர்களில் கிறிஸ்துவைக் கண்டார் என்றும் அவர் கூறினார்.

நாடு கடத்தப்பட்டு துன்புற்ற போலந்து ஆயர் சிக்மண்ட் செஷெனி பெலின்ஸ்கி, செல்வக் குடும்பத்தில் பிறந்து தனது 27 வது வயதில் இறந்த சிஸ்டெர்சியன் துறவி புனித இரபேல் ஆர்னாய்ஸ் பரோன், அயராது போதித்த ஸ்பானியரான அருள்தந்தை புனித பிரான்சிஸ்கோ கோல் குய்டார்ட் ஆகியோரையும் புனிதர்கள் என அறிவித்து அவர்கள் பற்றியும் விளக்கினார் திருத்தந்தை.

இந்தப் புனிதர் பட்டமளிப்பு திருப்பலியை ஏறத்தாழ நாற்பதாயிரம் விசுவாசிகள் கண்டுகளித்தனர். பசிலிக்காவின் கொள்ளவைவிட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பசிலிக்கா சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான திரைகளிலும் பலர் திருப்பலியைக் கண்டனர். உரோமின் காலநிலை காரணமாக இத்திருப்பலி வளாகத்தில் வைக்கப்படாமல் பசிலிக்காவில் இருந்தது. இத்திருப்பலியில் ஹவாய் தீவிலிருந்து தொழுநோயாளர் மற்றும் அவர்களுக்குப் பணிசெய்யும் பிரதிநிதி குழுவும் பங்கெடுத்தது.

பெல்ஜிய நாட்டவரான புனித தமியான் தனது 23வது வயதில் ஹவாய் தீவு சென்று அங்கு எட்டு ஆண்டுகள் மறைப்பணியாற்றிய பின்னர், 1873ம் ஆண்டு மொலாக்காய் தீவிலுள்ள தொழுநோயாளர் காலனியில் ஆன்மீகக் குருவாகவும், மருத்துவராகவும் உளவியல் வழிகாட்டியாகவும் சுமார் 800 தொழுநோயாளர்க்குச் சேவையைத் தொடங்கினார். பின்னர் தானும் அந்நோயால் பாதிக்கப்பட்ட போது சிகிச்சைக்காக அத்தீவை விட்டு வர மறுத்தார். இறுதியில் 1889ம் ஆண்டு தனது 49வது வயதில் இறந்தார். இவர் தொழுநோயாளரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.








All the contents on this site are copyrighted ©.