2009-10-10 16:24:21

ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 7: 7-11

எனவே நான் மன்றாடினேன்: ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை வேண்டினேன்: ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்: அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை: அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்: அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்: ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.



எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12-13

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.



மாற்கு நற்செய்தி 10: 17-30
இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார். அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், \' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? \' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் \' என்றார். அப்போது பேதுரு அவரிடம், \'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\' என்று சொன்னார். அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.







All the contents on this site are copyrighted ©.