2009-10-09 14:38:05

இராணுவத்திற்கென செலவழிக்கப்படும் தொகை மட்டும் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது, திருப்பீட உயர் அதிகாரி கவலை


அக்.09,2009 உலகு, கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் இராணுவத்திற்கென செலவழிக்கப்படும் தொகை மட்டும் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

உலகளாவிய ஆயுதக்களைவு பற்றி ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வின் முதல்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் செலஸ்தினோ மிலியோரே, கடந்த ஆண்டில் இராணுவத்திற்கென செலவழிக்கப்பட்ட தொகை நான்கு விழுக்காடு அதிகரித்து அதன் மொத்த தொகை ஏறத்தாழ 146 கோடி டாலராக இருந்தது என்று கூறினார்.

உலகில் ஆயுத வியாபாரம் சட்டத்துக்குப் புறம்பே அதிகமாக இடம் பெற்று மனித சமுதாயத்துக்குப் பெரும் கேட்டை வருவிக்கின்றது என்று எச்சரித்த அவர், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக்களைவு வழியாக இராணுவத்திற்கென செலவழிக்கப்படும் தொகையைக் குறைப்பதே, ஆயுதக்களைவுக்கான அமைப்பின் முக்கிய பணியாகும் என்று கூறினார்.

ஆயுதக்களைவு விவகாரத்தில் இன்னும் தீர்க்கப்படாத சில காரியங்கள் பற்றி சுட்டிக் காட்டிய பேராயர் மிலியோரே, அணுப்பரிசோதனை தடை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அது அமலுக்கு வருவதற்கு இன்னும் ஒன்பது நாடுகளின் கையெழுத்து தேவைப்படுவதால் அணுப்பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.