2009-10-07 16:30:02

பொருளாதாரச் சரிவால் பலர் வேலைகளையும் குடும்பத்தின் அடிப்படைப் பாதுகாப்பையும் இழந்துள்ளது எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது, திருப்பீட உயர் அதிகாரி


அக்.07,2009 சென்ற ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, வளர்ச்சி செல்வம் ஆகியவைகளின் நிலையற்ற தன்மையை நமக்கு உணர்த்தியுள்ளவேளை, இந்தப் பொருளாதாரச் சரிவால் பலர் வேலைகளையும் குடும்பத்தின் அடிப்படைப் பாதுகாப்பையும் இழந்துள்ளது எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் 64வது அமர்வு, நமது பழைய தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நம்மிடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகளைப் பலப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்று பேராயர் செலஸ்தினோ மிலியோரே அவ்வமர்வில் உரையாற்றினார்.

இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை என்பதைத் திருப்பீட பிரதிநிதிகள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர் என்றும், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் மிலியோரே கூறினார்.

சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் பலமிழந்த மக்களை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு விடுத்துள்ளதைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடுகள் அளவிலும் பன்னாட்டு அமைப்புகளிலும் பொறுப்பான அரசியல் முடிவுகள் எடுக்கப்படுவது மிக அவசியம் என்றும் கோப்பன்ஹாகனில் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து நடக்கவிருக்கும் அனைத்துலகக் கருத்தரங்கு உலக நாடுகள் எவ்வளவு தூரம் ஒருங்கிணைந்துள்ளது என்பதைச் சோதித்தறிய ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விவாதங்களில் தனிமனிதர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று எல்லா நிலைகளிலும் நன்னெறிக் கோட்பாடுகள் மையமாக அமைய வேண்டும் என்றும் பேராயர் கூறினார்.

பல்வேறு நிலைகளிலும் ஊடுருவியிருக்கும் ஊழல், உடல்நலம் சம்பந்தமான பல்வேறு தொற்று நோய்கள், பொருளாதார வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மாற்றம், தீவிரவாதம், உணவுப்பற்றாக்குறை, குடிபெயர்வோரின் அவலங்கள் ஆகியவை அனைத்தும் தனிநாட்டுப் பிரச்சனைகளாக அல்லாமல், பன்னாட்டுப் பிரச்சனைகளாகக் கருதப்பட்டு அவற்றிக்கான முடிவுகள் தேடப்பட வேண்டும் என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.