2009-10-07 16:09:50

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்.


அக்.07,2009. ஆப்ரிக்காவிற்கான ஆயர் பேரவை வத்திக்கானில் இடம்பெற்றுவரும் இவ்வேளையிலும், காலை 9 மணிக்கு அவ்வமர்வில் கலந்துக் கொண்டு, 10.30 மணிக்கு புனித ராயப்ப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

இறையன்னையின் குருக்கள் சபையைத் தோற்றுவித்த புனித ஜான் லியோனார்தி இறந்ததன் 400ம் ஆண்டை இவ்வாரத்தில் நினைவு கூர்ந்து சிறப்பிக்கின்றோம். இக்குருவின் மறைப்பணி உள்ளார்வம், விசுவாசப்பரப்புதல் பேராயம் உருவாக்கப்பட்டதில் தன் வெளிப்பாட்டைக் கண்டது. இத்தாலியின் லூக்கா எனுமிடத்தில் பிறந்த இவர் முதலில் மருந்தகப் பணியாளராகப் பயிற்சி பெற்று பின்னர் குருவாகி, இறைமருத்துவத்தை அவர் காலத்தின் மக்களுக்கு வழங்குவதில் தன்னை அர்ப்பணமாக்கினார். திருச்சபையின் வாழ்வில் பெருமாற்றங்களும் புதுப்பித்தலும் இடம் பெற்று வந்த காலக்கட்டத்தில் இப்புனிதர் சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தன் போதனைகளின் மையமாகவும் தன் வாழ்வு நடவடிக்கைகள் அனைத்தின் ஆதாரமாகவும் கொண்டிருந்தார். அனைத்து நல் மாற்றங்களும் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினாலும் திருச்சபை மீதான அன்பினாலுமே பிறக்கின்றன என்பதை புனித ஜான் லெயோனார்தி நன்றாகப் புரிந்திருந்தார். இளையோருக்கு மறைக்கல்வி வழங்கவும் மறைப்பணிகளை ஊக்குவிக்கவும் கிறிஸ்தவ வாழ்வு மற்றும் வாழ்க்கை முறைகளைப் புதுப்பிக்கவும் கிறிஸ்துவின் மீதான அவரின் அன்பே தூண்டுகோலாக இருந்தது. மனிதனுக்கு கிறிஸ்துவே அனைத்துமானவர் என்பதை உறுதியாக நம்பிய புனித ஜான் லெயோனார்தி, உறுதியான உள்ளார்வத்துடன் புனிதத்துவத்தைப் பரப்பி வளர்ப்பதிலும் சமூகத்தைப் புதுப்பிப்பதிலும் ஈடுபட்டார். குருக்களுக்கான இவ்வாண்டின் போது குருக்களையும் பொதுநிலையினரையும் கிறிஸ்துவிலிருந்து அனைத்தையும் புதியதாய்த் தொடங்கவும் தங்கள் அழைப்பை விருப்பார்வத்துடன் ஏற்று அணைத்துக் கொள்ளவும் இம்மாபெரும் மறைப்பணியாளர் தூண்டுவாராக எனக்கூறித் தன் புதன் மறை போதகத்தை நிறைவு செய்தார்.

தன் மறை போதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.