2009-10-06 17:14:58

விவிலியத்தேடல்


"காலையில் ஒலித்தது அலாரம். தூங்கிக்கொண்டிருந்த இளைஞனின் காதுகளைத் தாக்கிய ஒலி அலைகளால் அவன் காதுக்குள் இருந்த செல்களில் மாற்றங்கள். அலாரம் கேட்டு கண் விழித்தான். கண்ணிமை உரசியதால் விழியின் மேல் படலத்தில் இருந்த செல்களில் மாற்றங்கள்... அந்த இளைஞனின் அன்றைய வாழ்வுக்கான மாற்றங்கள் துவங்கி விட்டன." இந்த வரிகளுடன் ஆரம்பமாகிறது BBC நிறுவனம் தயாரித்துள்ள ஒரு அறிவியல் திரைப்படம். மனித உடல் என்ற தலைப்புடன் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான இத்திரைப்படம் பல பெரு நகரங்களில் IMAX எனப்படும் மாபெரும் திரை வடிவத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



மாற்றம் என்பது மனிதருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான அடிப்படை நியதி. மாற்றம் இல்லையெனில் மரணம் என்பார்கள். மரணத்திற்குப் பின்னும், புதைக்கப்பட்ட மனித உடலில்தான் எத்தனை மாற்றங்கள். குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என்று மனித உடலிலும், மனதிலும், அறிவிலும் எத்தனை மாற்றங்கள்? பருவ மாற்றங்கள்,  கலாச்சார மாற்றங்கள், எண்ணங்களில் மாற்றங்கள்,... மாற்றங்கள் என்று நினைக்கும் போது... பட்டியல் மிகவும் நீளும்... மாற்றம் என்ற இந்த அடிப்படை உலக நியதியைப் பற்றி சிந்திக்க நானாகத் தேடிக்கொண்ட ஒரு வாய்ப்பு இன்றைய விவிலியத் தேடல். இன்றையத் தேடலில் இயேசு உருமாறிய நிகழ்வைப் பற்றி சிந்திக்க உங்களை அழைக்கிறேன். இயேசு உருமாறிய நிகழ்வைப் வழக்கமாக ஒரு புதுமையாக நாம் சிந்திப்பது இல்லை. மாற்றத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம். உருமாற்றம் என்ற நிகழ்வையும் புதுமை என்ற கண்ணோட்டத்திற்கு மாற்றுவோமே. இதோ, இயேசுவின் உருமாற்றத்தைக் கூறும் லூக்கா நற்செய்தி.



லூக்கா நற்செய்தி 9:28-36  

இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.



இதுவரை நமது விவிலியத் தேடல்களில் இயேசுவின் புதுமைகள் ஏன் நிகழ்ந்தது என்பதைக் காண அவைகளின் பின்னணியைச் சிந்தித்திருக்கிறோம். இந்த நிகழ்வுக்கு என்ன பின்னணி? மத்தேயு, மாற்கு, லூக்கா என்று மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் உருமாற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு தன் மரணத்தைப் பற்றி முதன் முறையாகச் சீடர்களுக்குத் தெரிவித்த சம்பவத்திற்குப் பின் உருமாறும் சம்பவம் கூறப்பட்டுள்ளது. இயேசு தன் மரணம் பற்றி கூறியதும் சீடர்கள் அதிர்ச்சி, கலக்கம் என்று பல மன நிலைகளில் சோர்ந்து போயிருக்க வேண்டும். அவர்களது சோர்வை நீக்க, கலக்கத்தைப் போக்க ஒரு மாற்று மருந்தாக இயேசுவின் உருமாற்றம் இடம் பெறுகிறதென நான் நினைக்கிறேன்.



உருமாற்றம் என்றால் என்ன? ஏன், எப்படி, அது உண்டாகிறது? மாற்றம் தேவையா, இல்லையா? மாற்றம் நல்லதா, கெட்டதா? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கூட்டுப் புழு வண்ணத்துப் பூச்சியாகும் அற்புதத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு வீடியோ பதிவு மூலம் அதைப் பார்த்திருக்கிறேன். ஓரளவு ‘editing’ செய்யப் பட்ட தொகுப்பு அது. விடீயோவில் பார்க்கும்போதே என் பொறுமை சோதிக்கப்பட்டது. நேரில் பார்க்க இன்னும் அதிகப் பொறுமை வேண்டும் என நினைக்கிறேன். பொறுமை இழந்து ஏதாவது செய்துவிட்டால்...



பல ஆண்டுகளுக்கு முன்னால் "கூட்டுப் புழுவும், வண்ணத்துப் பூச்சியும்" என்ற தலைப்பில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு பகுதி இது:

கூட்டுப்புழுவில் ஒரு ஓட்டை விழுந்தது. அதைப் பார்த்த அவனுக்கு ஆவல். உள்ளிருந்த ஒரு உயிர் அசைந்து ஆடி ஓட்டையைப் பெரிதாக்க முயன்றதைப் பார்த்தான். சீக்கிரம் கூட்டை உடைத்து, வண்ணத்துப் பூச்சி வெளியே வந்து பறந்து போகும் என்று காத்திருந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். ஒன்றும் நடக்கவில்லை. ஒருவேளை உள்ளிருந்த உயிரால் ஒன்றும் செய்ய முடியவில்லையோ என்று எண்ணினான். அதற்கு உதவி செய்யும் எண்ணத்தோடு ஒரு கத்திரிக்கோலை எடுத்து, அந்த ஓட்டையை இன்னும் பெரிதாக்கினான். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளியே வந்தது. பார்ப்பதற்கு விகாரமாய் இருந்தது. ஊதிப் பருத்த உடல், ஆனால் சுருங்கிப் போன இறக்கைகள் என்று வெளியே வந்த அந்தப் பூச்சி எவ்வகையிலும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் போல் இல்லை. எந்த நேரத்திலும் அந்த அசிங்கமான பூச்சி மாறி வண்ணத்துப் பூச்சியாகும் என்று எதிபார்த்திருந்த அவனுக்கு ஏமாற்றம் கூடியது, குறையவில்லை. அந்தப் பூச்சி, அந்தப் பூச்சியாகவே ஊர்ந்து வந்ததே தவிர வண்ணத்துப் பூச்சியாகவில்லை.



உதவி செய்வதாக நினைத்து அவன் செய்தது விபரீதமாக முடிந்தது. இயற்கையின் போக்கு அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால், இப்படி அவன் செய்திருக்க மாட்டான். கூட்டுப் புழு அந்தக் கூட்டிலிருந்து வெளியேற மேற்கொள்ளும் போராட்டம் நீண்டதொரு போராட்டம். அனால், அந்த போராட்டத்தின் போது அதன் உடலிலிருந்து வெளியேறும் திரவம், அந்தப் புழுவின் உடலைச் சுருக்கும், இறக்கைகளைப் பெரிதாக்கும். போராட்டத்தின் இறுதியில் அழகான வண்ணத்துப் பூச்சி வெளியேறி பறக்கும். கூட்டுப் புழு பார்க்க அழகில்லாதது... வண்ணத்துப் பூச்சி அழகுக்கு இலக்கணமாய் அமைவது. இந்த மாற்றம் உருவாக, போராட்டம் தேவை. போராட்டம், துன்பம் இவை ஈன்றெடுக்கும் குழந்தைதான் மாற்றம்.



வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்களை எதிர் கொள்ள நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் இவை நம்மையும், நமது சூழ்நிலைகளையும் மாற்றும், சில சமயம் புரட்டிப் போடும். இதைப் நாம் புரிந்து கொள்ளாமல், போராடும் மற்றொருவருக்கு உதவுவதாக நினைத்து, குறுக்கு வழிகளை அவருக்குச் சொல்லித் தரும் போது, விபரீதங்கள், விவகாரங்கள், விகாரங்கள் நேரவும் வாய்ப்பு உண்டு.



குறுக்கு வழிகளைப் பற்றி பேசும் போது, ஆசிரியராக கல்லூரியில் இருந்த நேரம் நினைவுக்கு வருகிறது. பள்ளிபடிப்பு முடிந்து கல்லூரியில் சேரும் பல இளையோரைப் பார்த்திருக்கிறேன். அதிலும் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் கள்ளம் கபடம் இல்லாது வந்து சேருவார்கள். ஒரு சில மாதங்களில், அல்லது ஓராண்டில் அவர்களில் நேரும் மாற்றங்கள்... பெரும்பாலும் கவலைதரும் மாற்றங்களாக இருக்கும். சென்னை போல ஒரு பெரு நகர கல்லூரி மாணவனாவதற்கு குறுக்கு வழிகளை இவர்களுக்குச் சொல்லித்தர பலர் காத்திருக்கின்றனர். எத்தனையோ பேர் இந்த குறுக்கு வழிகளுக்குப் பலியாகி, திசை மாறி, வழி மாறி, வாழ்வையேத் தொலைத்திருக்க வேண்டும்.

செப்டம்பர் மாத இறுதியில் ஞாயிறு சிந்தனையில் நாம் பேசிய எந்திரக்கல் மனதில் நிழலாடுகிறது.



"இறுதி இரவுணவு" என்ற உலகப் புகழ் மிக்க ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி வரையும் போது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இது. டா வின்சி ஓவியம் வரைவதற்கு ஆட்களைத் தேடுகிறார் என்று அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரது இல்லம் நோக்கி படையெடுத்தனர். அந்தக் கூட்டத்தில் அமைதியாக, கொஞ்சம் ஒதுங்கியே நின்ற ஒரு 20 வயது இளைஞனை டா வின்சி முதலில் தெர்தேடுத்தார். அவரை வைத்து, இயேசுவை வரைந்தார். பின்னர் ஒவ்வொரு சீடரை வரைவதற்கும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, வரைந்து கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளாய்த் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின் இறுதி கட்டத்தில் யூதாஸை வரைந்தார். ரோமையச் சிறையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு இளைஞனை வைத்து யூதாஸை வரைந்துகொண்டிருந்த போது அவன் அழுதான். விவரம் கேட்டார் டா வின்சி. “ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் தீட்டிய இயேசுவும் நான்தான்” என்று அவன் சொன்னான். நம்மில் பலருக்குத் தெரிந்த கதை. உண்மையாக நடந்ததா என்று பலரும் சந்தேகிப்பார்கள். ஒரு இளைஞன் ஒரு சில ஆண்டுகளில் உருவம், பழக்க வழக்கம் இவற்றில் பெரும் மாற்றங்கள் அடைவதை எல்லாருமே பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம்.



இயேசு உருமாறிய நிகழ்ச்சியில் இரு அம்சங்களைக் கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்க்கலாம். ஒன்று, "அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.” செபம் ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். ஆழ்நிலை தியானத்தில், செபத்தில் இருப்பவர்களின் முகத்தில் குடிகொண்டிருக்கும் ஆழமான அமைதியை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஏதோ ஒரு தனி உலகில் இருக்கிறார்கள் போலும் என்று நான் எண்ணியதுண்டு. செபத்தின் வல்லமையை, அதனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஓரளவாகிலும் நாம் உணர இறைவன் உதவ வேண்டும் என வேண்டுவோம்.



இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா இருவருடன் இயேசு பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். என்ன பேசிக் கொண்டிருந்தார்? "மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.” பேசுவதற்கு வேறு எதுவும் விஷயம் கிடைக்கவில்லையா? தன் மரணத்தை முன்னறிவித்ததால், மனம் உடைந்த சீடரின் கலக்கத்தை நீக்க ஒரு மாற்றாகத்தானே இந்த ஒளி, மகிமை எல்லாம்? இந்த நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? நமக்கு மீண்டும் ஒரு பாடம் இங்கே உண்டு. புகழின் உச்சியில் பூமியை மறந்து, மேகத்தில் மிதந்து வரும் போது, நம்மில் பலருக்குச்  சூழ்நிலை மறந்து போகும். தலை கனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்து வரும் மேகம் கிழிந்து போகும், பலவந்தமாக பூமியில் விழ வேண்டி வரும். அதற்கு மாறாக என்னதான் புகழும் பெருமையும் நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக் கூடாது. நாம் பல்லக்கில் பவனி வருவது போல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத் தாங்கி வரும், இதுவரை நம்மைத் தாங்கி வந்த மற்றவரை மறக்காமல், நமது வாழ்வுக் குறிகோளையும் மறக்காமல் வாழ்வது நமக்கு நல்லது. என்னதான் பெரிய, பெரிய மாளிகைகள் போல மாற்றங்கள் உருவானாலும், அந்த மாளிகை கட்டப்பட்ட அடித்தளத்தை மறக்கக் கூடாது. என்னதான் பெரிய ஆலமரமாய் மாற்றங்கள் நம்மை மாற்றிவிட்டாலும், வேர்களை, விழுதுகளை மறக்கக் கூடாது. இதுதான் இயேசு சொல்லித்தரும் பாடம்.



என்னதான் இயேசு உருமாறிய போதும், அவரது வாழ்வின் குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை. இதனால்தான், எருசலேமில் அவர் நுழைந்த போது, ஊரே திரண்டு அவருக்கு 'ஓசான்னா' பாடிய போதும், அவர் தன்னை மறந்து விடவில்லை. மாறாக, இன்னும் சில நாட்களில் அதே தெருக்களில் இதே கூட்டத்திற்கு நடுவே சிலுவை சுமந்து நடக்கவேண்டும் என்பதை ஆழமாய் உணர்ந்திருந்தார்.



மாற்றங்கள் மனித வாழ்வின் மையம். அது இல்லையெனில் மரணம் தான். மாற்றங்கள் நேரும் போது போராட்டங்களும் இருக்கும். ஒவ்வொரு மாற்றமும் குழந்தை பெறுவது போன்றது. துன்பம், போராட்டம் இவற்றினின்று பிறப்பது மாற்றம். நம்மைச் சுற்றி எழும் மாற்றங்கள் ஒரு கனவுலகை உருவாக்கினாலும், அந்தக் கனவுகளின் நடுவிலும் வாழ்வின் குறிக்கோளை, லட்சியத்தை நினைவில் கொள்வது நமக்கு நல்லது.


இதுவும், இது போன்று பலவும் இயேசு உருமாறிய நிகழ்வின் வழியே நாம் இன்று கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்.







All the contents on this site are copyrighted ©.