2009-10-06 17:39:04

ஆப்ரிக்கக் கண்டத்தின் வளங்களைச் சுரண்டுவதிலே கண்ணாயிருக்கிறார்கள், எத்தியோப்பிய பிதாப்பிதா கவலை


அக்.06,2009 தற்போது வத்திக்கானில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவை, அக்கண்டத்தின் மக்களுக்கான நல்தீர்வுகளையும் ஒழுக்கரீதி வழிகாட்டுதல்களையும் கொணரும் என தான் உறுதியாக நம்புவதாக எத்தியோப்பிய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா பவுலோஸ் இன்று இப்பேரவையில் உரையாற்றினார்.

பல்வேறு வளங்களையுடைய ஆப்ரிக்கக் கண்டம் வேறு நாடுகளால் ஆக்ரமிக்கப்பட்டு சுரண்டப்பட்டுள்ள சூழலில் பலர் இன்றும் அதன் வளத்தின் மீதே கண்ணாயிருக்கிறார்களேயன்றி அதன் வளர்ச்சியின் மீதல்ல என கவலையையும் பிதாப்பிதா வெளியிட்டார்.

ஆப்ரிக்காவின் வளத்தால் ஏனைய நாடுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அக்கண்டத்தின் மக்களே கடன் சுமையால் துவண்டு கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறிய பிதாப்பிதா, ஆப்ரிக்காவின் எய்ட்ஸ் நோய் பிரச்சனையைக் களைவதில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பல ஆப்ரிக்க நாடுகளில் இடம் பெற்று வரும் உணவுப் பற்றாக்குறை, குடிநீரின்மை, போதிய உறைவிடங்களின்மை போன்றவைகள் குறித்தும் ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவையில் எடுத்துரைத்த, பிதாப்பிதா, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பலகாலமாகியும் தங்கள் தேவைகளுக்காக இந்த நாடுகள் பணக்கார நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இன்னும் உள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்.

இந்த ஆயர் பேரவை இம்மாதம் 25ம் தேதி நிறைவு பெறும்








All the contents on this site are copyrighted ©.