2009-10-05 15:45:47

தென்கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் பகுதியிலும் இத்தாலியிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்


அக்.05, 2009 தென்கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் பகுதியிலும் இத்தாலியிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த அதேவேளை, இம்மக்களுக்கான சர்வதேச உதவிகளுக்கும் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஞாயிறு நண்பகலில் தன்னோடு சேர்ந்து மூவேளை செபம் சொல்வதற்காக வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்து கினி நாட்டில் வன்முறைக்குப் பலியானவர்களையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

சமோவா மற்றும் டோங்கா தீவுகளில் இடம் பெற்ற சுனாமி, பிலிப்பைன்ஸ், பின்னர் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைத் தாக்கிய கடும் புயல், இந்தோனேசியாவி்ல் இடம் பெற்ற நிலநடுக்கம், இத்தாலியின் சிசிலியில், குறிப்பாக மெசினாவில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற அண்மையில் இடம் பெற்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவுபடுத்தி அவர்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் அவர்.

இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் ஆப்ரிக்காவிற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை தொடங்கியுள்ள சூழலில், அக்கண்டத்தின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோதல்களையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

கினி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அண்மை வன்முறைகள் பற்றித் தான் அறிந்துள்ளதாகவும் அவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி கோனக்ரி விளையாட்டு அரங்கத்தில் நாட்டின் பொதுத் தேர்தல்களையொட்டி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்குவதற்காக படைவீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுமார் 150 பேர் இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.