2009-10-02 14:58:00

பிலிப்பைன்ஸில் ஏழ்மையை களைவதற்கான முயற்சிகளில் நேர்மையும் ஒருங்கமைவும் நீதிக் கொள்கைகளுக்குத் தடம்புரளா பிரமாணிக்கமும் இருக்க வேண்டும், திருத்தந்தை


அக்.02,2009 பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏழ்மையை களைவதற்கான முயற்சிகளில் அனைவரிடமும், குறிப்பாக நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் நேர்மையும் ஒருங்கமைவும் நீதிக் கொள்கைகளுக்குத் தடம்புரளா பிரமாணிக்கமும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வெள்ளியன்று கூறினார்.

திருப்பீடத்துக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய தூதுவர் திருமதி மெர்செடெஸ் அராஸ்தியா துவாசோனிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, சில குழுக்களால் கடவுளின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படும் இக்காலத்தில் இத்தகைய பண்புகள் மிகுதியாகத் தேவைப்படுகின்றன என்று வலியுறுத்தினார்.

அமைதி எங்கும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக அனைவரும் இப்பண்புகளைக் கொண்டிருக்குமாறு கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், சட்டம், நீதித்துறை அல்லது பொருளாதார வழிகள் மூலமாக மட்டும் அமைதியை ஒருபொழுதும் அடைய முடியாது, மாறாக இதற்கு உரையாடலும் கலாச்சார பரிமாற்றங்களும் மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும், திருப்பீடத்துக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டளவாக அரசியல் உறவு இருந்து வருவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, பிலிப்பைன்ஸ் மக்களின் விசுவாசம், கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் விதைத்துள்ள அன்புக் கலாச்சாரத்தை உலகில் கட்டி எழுப்ப உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.