2009-10-02 15:04:44

பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டம் இரத்து செய்யப்பட கிறிஸ்தவ நிறுவனங்கள் அழைப்பு


அக்.02,2009 பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதம் 24ம் தேதி தேசிய கருத்தரங்கு ஒன்றிற்கு அந்நாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தேசிய அளவில் நடைபெறவிருக்கின்ற இக்கருத்தரங்கில் பெருவாரியான மக்கள் பங்கு கொள்வதற்கு வசதியாக, அக்டோபர் 24ம் தேதி கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் இது ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அதனை நடத்துவோர் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, இவ்வியாழனன்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரை சந்தித்தற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையையொட்டி பாகிஸ்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் இக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

மதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் ஒவ்வொரு வகையான பாகுபாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பது உட்பட சில கூறுகள் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், பாகிஸ்தான் குடியரசுத் தலைவரும் இத்தாலிய அரசியல்வாதிகளுடன் நடத்திய சந்திப்புக்களில், பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை தனது அரசு எடுக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.