2009-10-02 15:02:33

இந்தோனேசியாவில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை ஆறுதல்


அக்.02,2009 இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, இந்தோனேசியாவிற்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லிக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், இவற்றில் இறந்த மக்களுக்கான திருத்தந்தையின் செபமும் அவர்களின் குடும்பங்களுக்கான அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர் துடைப்புப் பணி செய்து வரும் அனைவரையும் திருத்தந்தை ஊக்குவிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் செப்டம்பர் 30ம் தேதி ஏற்பட்ட பூமிஅதிர்ச்சியில் 800 பேர் வரை இறந்துள்ளனர், 2180 பேர் காயமடைந்துள்ளனர், அநேக கட்டிடங்கள் சேதமாகியுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கின்றனர் என அஞ்சப்படுகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் கடுமையான பூமி அதிர்ச்சிகளும் சுனாமிகளும் இங்கு ஏற்படக்கூடும் என்று அறிவியலார் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, திறமை வாய்ந்த மீட்புப் பணியாளரும் வாகனங்களும் மருந்துகளும் பிற உதவிகளும் தேவைப்படுகின்றன என்று இந்தோனேசிய நலவாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.