2009-10-02 15:03:40

அஹிம்சாவின் சக்தி வாய்ந்த செய்தியை ஊக்குவிக்க வேண்டியது எக்காலத்தையும்விட இன்று அதிகமாகத் தேவைப்படுகின்றது, பேராயர் மெனாம்பரம்பில்


அக்.02,2009 இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் மோதல்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் அஹிம்சாவின் சக்தி வாய்ந்த செய்தியை ஊக்குவிக்க வேண்டியது எக்காலத்தையும்விட இன்று அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று குவாஹாத்தி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் கூறினார்.

அக்டோபர் 2, இவ்வெள்ளி, மகாத்மா காந்தி பிறந்ததன் 140ம் ஆண்டும் சர்வதேச அஹிம்சா தினமும் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பேராயர் மெனாம்பரம்பில், இந்தியாவின் தந்தையாகிய மகாத்மா காந்தி வன்முறையற்ற வாழ்வுக்கு அழைப்பு விடுப்பதைச் சுட்டிக் காட்டினார்.

காந்திஜியின் அமைதி பற்றிய செய்தி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் ஆகியவை பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட பேராயர், சகிப்பற்றதன்மை, இனமோதல்கள், பொருளாதார ஆதாயங்கள், அரசியல் வன்முறை, பயங்கரவாதம் போன்றவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்றன என்பது கவலை தருகின்றது என்றும் கூறினார்.

இந்தியாவின் கருத்துக் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மெனாம்பரம்பில், உரையாடல், சகிப்புத்தன்மை, நம்பிக்கை, பிறரன்பு மற்றும் ஒருமைப்பாடு வழியாக அமைதி, புரிந்து கொள்ளுதல், நல்லிணக்கம் ஆகியவற்றைக் கட்டி எழுப்பும் பாலமாக இந்திய திருச்சபை செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

 








All the contents on this site are copyrighted ©.