2009-10-01 15:33:44

பாகிஸ்தான் குடியரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


அக்.01,2009 பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்துள்ள காஸ்தெல் கண்டோல்போவில் இவ்வியாழன் முற்பகலில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டைச் சந்தித்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் பாகிஸ்தான் தலைவர் சந்தித்தார்.

இச்சந்திப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், பாகிஸ்தானின் சில பகுதிகளில் கிறிஸ்தவ சமூகத்திற்கெதிராக இடம் பெற்ற அண்மை வன்முறைகள் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டன, மதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் ஒவ்வொரு வகையான பாகுபாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது மற்றும் அனைத்து குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்படுவது இன்றியமையாதது என்று பாகிஸ்தான் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது எனக் கூறியது.

தற்போதைய பாகிஸ்தானின் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் நாட்டின் சமூக வாழ்க்கைக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் பேசப்பட்டன என்றும் அவ்வலுவலகம் தெரிவித்தது.

 








All the contents on this site are copyrighted ©.