2009-09-29 17:38:29

விவிலியத்தேடல் 


லூக்கா நற்செய்தி 8/41-48

அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார். ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று. ' என்னைத் தொட்டவர் யார்? ' என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர். பேதுரு, ' ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே ' என்றார். அதற்கு இயேசு, ' யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன் ' என்றார். அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே வந்து அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார். இயேசு அவரிடம், ' மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ ' என்றார்.



கூட்டத்தைக் குணமாக்கிய பெண்.



அவள் அந்தக் கூட்டத்தில் இருந்தாள். அவள் முண்டியடித்து, முன்னேறிக் கொண்டிருந்தாள். அவள் ரத்தக் கசிவு நோயுள்ள பெண்! ஆ!, அநியாயம்! அக்கிரமம்! அலங்கோலம்! அபச்சாரம்!.. அ, ஆ வில் எத்தனை வார்த்தைகள் தெரியுமோ, அத்தனையையும் சொல்லுங்கள்.

பெண், நோயுள்ள பெண், அதிலும் ரத்தக் கசிவு நோயுள்ள பெண் கூட்டத்தில் இருக்கிறாளா? அபச்சாரம், அபச்சாரம்... அவள் யார் யார் மீதெல்லாம் மோதினாலோ, அவர்களெல்லாம் தீட்டுப் பட்டவர்களாயிற்றே!

ரத்தக் கசிவு நோயுள்ள பெண் சமூகத்தினின்று விளக்கி வைக்கப் பட வேண்டும். இது இஸ்ராயலர்களின் விதி. அதுவும் மோசே வழியாக பல நூற்றாண்டுகளாய் வரும் விதி. ஆனால், இவளோ கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தாள். அவள் மனமெங்கும் ஒரே மந்திரம்: "அவர் ஆடைகளின் விளிம்பைத் தொட்டாலும் போதும், நான் குணம் பெறுவேன்."

அவளுக்குத் தெரியும்... ஏசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப் போகும் என்று அவளுக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கி வைத்தல் போன்ற இதயமற்ற போலி சட்டங்கள் யேசுவிடம் பொசுங்கிப் போகும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில் தான் அவள் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

அவளுக்குத் தெரியும்... இயேசுவின் ஓரங்கள் கூட அவரது ஆடையின் விளிம்புகள் கூட குணமளிக்க வல்லது என்று. அந்தத் துணிவில் தான் அவள் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

இருந்தாலும் அவளுக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, யேசுவிடம் நலம் வேண்டிக் கேட்க ஒரு சின்ன பயம்.

அவளுடைய பயமெல்லாம் யேசுவைப் பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப் பற்றி... முக்கியமாக யேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப் பற்றி. ஆண் வர்க்கம் எப்போதும் யேசுவைச் சுற்றியிருந்ததால், பெண்ணாகிய அவளுக்கு இயேசுவை அணுக வாய்ப்பு இல்லாமல் போனது. இரவில் யாரும் அறியாமல் யேசுவைச் சந்திக்கச் சென்ற நிக்கொதேமுஸ் போல சந்திக்கவும் வழியில்லை. இவள் பெண். அதிலும் சட்டங்களால், விலக்கிவைக்கப் பட வேண்டிய ஒரு நோயுள்ள பெண்.

கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில் இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தாள், இயேசுவை அணுகினாள்.

அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையெல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டாள். குணம் பெற்றாள்.

இயேசு நின்றார். அவரது இதய அலைகள் ஒருவேளை ஆரம்பத்திலிருந்தே அவளது வித்தலை ஏக்கங்களுக்கு விடை தந்திருக்கலாம். குணம் அளித்தார்.

அதோடு விட்டிருக்கலாம். "அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. முன்னே வராமல், பின் புறமாய் வந்து குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவி விடலாம்." என்று வந்த பெண்ணை ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு இப்போது நடந்த புதுமையைப் பெரிது படுத்தாமல் போயிருக்கலாம்.

ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள். கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்க வேண்டும் என்று எண்ணினார்.....








All the contents on this site are copyrighted ©.