2009-09-27 16:20:19

திருத்தந்தையின் திருப் பயணம். செக் நாட்டில் பாப்பிறை - இரண்டாம் நாள்.


செக் நாட்டில் தன் மூன்று நாள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளத் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்டின் சனி மாலை பயணத்திட்டத்தில் செக் அரசுத்தலைவர் வச்லோவ் க்லௌஸ்ஐ அரசுத்தலைவர் இல்லத்தில் சென்று சந்திப்பது முதலில் இடம் பெற்றிருந்தது. தான் தங்கி இருக்கும் ப்ராகின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹ்ரடியானி கோட்டைக்குக் காரில் சென்றார் பாப்பிறை. இக்கோட்டைக்குள்தான் அரசுத்தலைவர் மாளிகை, பல்வேறு அரசு அலுவலகங்கள், புனித வித்துஸ் பேராலயம் ஆகியவை உள்ளன. இக்கோட்டை அன்றைய செகொச்லோவாக்கியா 1918 ம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசுத்தலைவர் இல்லமாகவும் செயல்பட்டு வருகின்றது.



அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தைக்கும், அரசுத்தலைவருக்கும் இடையேயான சந்திப்பு நடந்தது. அதேவேளை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸ்கோ பெர்தோனும் பிரதமர் ஜான் பிஷெரும் மற்றொரு அறையில் சந்தித்து, முன்னாள் கம்யூனிஸ அரசால் பறிமுதல் செய்யப்பட திருச்சபை சொத்துக்களைத் திரும்பப் பெறும் வழிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அரசுத்தலைவர் மாளிகையில் உள்ள ஸ்பானியக் கூடம் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரும் அரங்கில் சனி மாலை 5 மணிக்கு, பன்னாட்டு தூதர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் பல்கலை கழக வேந்தர்கள், தொழில்துறை, மற்றும் கலாச்சாரத் துறையைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார் பாப்பிறை. ஏறக்குறைய 45 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிக்குப் பின் அருகில் உள்ள புனிதர்கள் வித்துஸ், வென்செஸ்லாஸ், அடால்பெர்டோ பெயரில் அர்பணிக்கப் பெற்ற பேராலயத்திற்கு சென்றார் பாப்பிறை. 1334 ல் துவக்கப்பட்ட இப்பேராலயக் கட்டுமானப் பணி பல்வேறு காலங்களில் நிறுத்தப்பட்டதால், 1929ம் ஆண்டு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இப்பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவியர், குருமாணவர்கள், போது நல இயக்கங்களின் தலைவர்கள் என ஏறத்தாழ 2400 பேர் குழுமியிருந்தனர். இதுவே, சனியன்று பாப்பிறை கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியாகும்.



ஞாயிறன்று செக் நாட்டில் இரண்டாவது முக்கயத்துவம் நிறைந்த ப்ருனோ நகர் சென்றார் திருத்தந்தை. அந்நகரின் விமானத் தளத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளியரங்கில் ஞாயிறு காலை 10 மணி அளவில் (அதாவது இந்திய நேரம் பிற்பகல் 1 மணி 30 நிமிடங்களுக்கு) திருப்பலியை ஆரம்பித்தார். 75 ஆயிரம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டிருக்க, வந்திருந்த மக்கட்தொகையோ ஏறத்தாழ அதன் இருமடங்கு என அங்கு சென்றுள்ள எம் வத்திக்கான் வானொலி நிருபர்கள் கூறுகின்றனர். அண்மை நாடுகளான, ஜேர்மனி, ஆஸ்திரியா, பொலோனியா, ஸ்லோவாக்கியா ஆகிய இடங்களில் இருந்து மக்கள் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு திருப்பலியை நிறைவு செய்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் 1 மணி 45 நிமிடங்களுக்கு, அதாவது இந்திய நேரம் ஞாயிறு மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு அங்கேயே மதிய உணவு அருந்தி ஓய்வும் எடுத்துக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.