2009-09-25 14:10:46

இச்சனியன்று துவங்குகிறது திருத்தந்தையின் செக் நாட்டிற்கானத் திருப்பயணம்.


செப. 25. செக் நாட்டிற்கான மூன்று நாள் திருப்பயணத்தை இச்சனியன்று(26.09.09) துவக்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

செக் நாட்டு நேரம் சனி காலை 11.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3 மணிக்கு அந்நாட்டில் தன் பயணத்தை துவக்கும் திருத்தந்தை, அந்நாளில் தலைநகர் ப்ராஹாவின் குழந்தை இயேசு ஆலயத்தில் சிறு குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் சந்திப்பதுடன், மாலையில் ப்ராஹாவின் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று அரசுத்தலைவர் வாக்லாவ் க்ளாவ்ஸையும் சந்தித்து உரையாடுவார். செக் பிரதமர், செனட் அவைத் தலைவர், மக்கள் பிரதிநிதிகள் அவைத்தலைவர் ஆகியோரைச் சந்திப்பது, அரசு அதிகாரிகள், பிறநாட்டுத் தூதுவர்களை சந்தித்து உரை வழங்குவது, ப்ராஹா சான் வீத்தோ பேராலயத்தில் மாலை ஜெப வழிபாடு நடத்துவது ஆகியவை திருத்தந்தையின் சனி நிகழ்ச்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

தன் திருப்பயணத்தின் இரண்டாம் நாளான ஞாயிறன்று ப்ரொனோ நகர் செல்லும் திருத்தந்தை, அங்குள்ள விமான நிலையத்தின் அருகேயுள்ள பெரிய சதுக்கத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவார். மாலையில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும், பின்னர் கற்றறிவாளர் குழுவையும் சந்தித்து உரையாற்றுவார் .

திங்களன்று ஸ்தாரா பொலெஸ்லாவ் எனுமிடத்தில் திருப்பலி நிறைவேற்றி, இளைஞர்களுக்கான சிறப்புச் செய்தியொன்றையும் வழங்கிய பின், மாலை ரோம் நகர் திரும்புவார் பாப்பிறை 16ம் பென்டிக்ட்.








All the contents on this site are copyrighted ©.