2009-09-24 17:11:19

உலகச் சுற்றுலா தினத்தையொட்டி திருப்பீடக் குழுவின் சுற்றறிக்கை. 


செப். 25, 2009 "சுற்றுலா - வேற்றுமையைக் கொண்டாடுவோம்" என்ற கருத்துடன் செப். 27 ஆம் தேதி உலகச் சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, குடி பெயர்ந்தோர் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஆன்மீகத் தேவைகளைக் கண்காணிக்கும் திருப்பீடக் குழுவின் தலைவர் பேராயர் அன்டோனியோ மரிய வேலியோ மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நம்மிடையே உள்ள வேற்றுமைகள் அச்சத்துடனும், ஐயத்துடனும் எதிர் கொள்ளப்பட வேண்டிய ஆபத்துக்கள் அல்ல மாறாக, நமது வாழ்வை வளப்படுத்தும் நன்மைகள் என்று திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் கூறியதை நினைவுப்படுத்தும் ஆயர் வேலியோ, இந்த வேற்றுமைகளின் அனுபவங்களை வாழ்வில் நம்மை வளர்க்கும் கூறுகளாகப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்

இதுபோன்ற ஒரு கண்ணோட்டம் இன வேறுபாடுகளைக் களையவும், சகிப்புத்தன்மை,மற்ற இனத்தவர் மீது மதிப்பு, அவர்களோடு உரையாடல் போன்றவைகளை வளர்க்கவும் உதவும் என்றார்.

உலகின் பல பகுதிகளில் இறைவன் இன்னும் செயல்படுவதையும், பல்வேறு இனத்தவர் ஒன்று கூடுவதால், இந்த உலகம் இன்னும் மேம்பட்டு வருவதையும் கண் கூடாகக் காண்பதற்கு சுற்றுலா நல்லதொரு வாய்ப்பைத் தருகிறதென குறிப்பிட்டார் பேராயர்.
இறைவனின் ஆவி உலக மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த இன்னும் செயலாற்றுவதை மக்கள் உணரத் தன் வாழ்த்துக்களை உலக சுற்றுலா தினத்திற்குத் தெரிவித்தார் பேராயர் வேலியோ.







All the contents on this site are copyrighted ©.