2009-09-23 16:25:31

கார்பன் வெளியீட்டை குறைக்கப்போவதாக அமெரிக்காவும் சீனாவும் உறுதி 


புவி வெப்பமடைவதற்கு காரணமான வாயுக்களை அதிகம் வெளியிடும் இரண்டு உலக நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தங்களின் கார்பன் வெளியீட்டின் அளவை குறைத்து புவி வெப்பமடைவதை குறைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக, ஐநா மன்றத்தின் மாநாட்டில் உறுதியளித்துள்ளனர்.

நியூயார்க்கில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, புவி வெப்பமடைவதைத் தடுக்கத் தவறினால் அந்த தவறுக்காக தற்போதைய தலைமுறை எதிர்கால வரலாற்றில் எதிர்மறையான மதிப்பீட்டை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்ததுடன், அதன் விளைவாக வருங்கால சந்ததியினர் மாற்றியமைக்க முடியாத மிகப்பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரும் என்றும் கூறினார்.புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்கு தேவைப்படும் புதிய தொழில் நுட்பத்தேவைகளை வளரும் நாடுகள் கைக்கொள்வதற்கு தேவைப்படும் உதவிகளை வளர்ந்த நாடுகள் செய்ய வேண்டும் என்று சீனா அதிபர் ஹூ ஜின்தா வலியுறுத்தினார். புவியை வெப்பமடையச்செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில் உலக நாடுகள் விரைவில் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கத்தவறினால், அது தார்மீக அடிப்படையில் மன்னிக்க முடியாத செயலாக அமையும் என்று ஐ. நா மன்றத்தின் தலைமைச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் எச்சரித்தார்.

காலநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் கூடியுள்ள நிலையில், தாங்கள் வெளியிடும் கார்பன் வாயுவின் வெளியேற்றத்தை பெறுமளவில் குறைப்பதற்கு விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவற்றின் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட விமானங்களும் புதிய எரிபொருட்களும் இந்தப் பிரச்சினையை சமாளிக்க உதவும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.