2009-09-22 18:59:42

விவிலியத்தேடல்


லூக்கா நற்செய்தி, 8/22-25

ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், ' ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள் ' என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, ' ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம் ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், ' உங்கள் நம்பிக்கை எங்கே? ' என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், ' இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

புயல் வீசிக்கொண்டிருந்தது. இயேசு தூங்கிக் கொண்டிருந்தார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா?

மனசாட்சியோடு சண்டைகள் எதுவும் இல்லாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள் நன்றாகத் தூங்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில சமயங்களில் நானும் அப்படி தூங்கி இருக்கிறேன். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். சம்மனசுகள் வந்து குழந்தையிடம் பேசுகின்றன என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு தூக்கம் இயேசுவுக்கு. நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள் பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில் 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல தூக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.



நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும் போது, உடலும், மனமும் சோர்ந்து விடுகின்றன. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவைகள்தாம் நல்ல தூக்கத்திற்கு வழிகளா? சிந்திப்பது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு வழியைச் சொல்கிறேன். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை முடிந்த வரை கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயல வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு வழி. நமது பாரங்களைப் பற்றி ஒரு நல்ல நண்பரிடம் பேசுவது. அதன் மூலம் கிடைக்கும் தெளிவு.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

தூக்கத்தைப் பற்றி அதிகம் பேசிவிட்டேனோ? தயவுசெய்து விழித்துக்கொள்ளவும்.

புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயல் அடங்கிப் போனது.

அதன் பிறகு தன் சீடர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். "உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று?" புயலையும், விசுவாசத்தையும் சேர்த்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் தருகிறது இன்றைய விவிலிய வாசகம்.

புயல் வீசும் நேரத்தில் நம் விசுவாசம் எங்கே போகிறது?

ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா?

அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா?

அல்லது புயல் வரும் போதெல்லாம் விசுவாசம் நமக்கு டாட்டா காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

புயல் நேரத்தில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் பழக்கமான சூழ்நிலையில்தான் இருந்தனர். தினமும் மீன் பிடித்து வந்த அதே ஏரி. தினமும் பயன்படுத்தி வந்த அதே படகு. ஏறக்குறைய எல்லாமே பழக்கமானவைதாம்.

பழக்கமான சூழ்நிலையில் திடீரேனே எதிபாராதவை நடக்கும் போது, நமக்கு அதிர்ச்சி அதிகமாகும். தெரியாத, புரியாத சூழ்நிலை என்றால் எல்லாருமே கவனமாகச் செயல்படுவோம். அந்த நேரத்தில், எதிர்பாராதவைகள் நடந்தால்... அவற்றிற்கு நாம் தயாராக இருப்போம். ஆனால், தினம், தினம், திரும்ப, திரும்ப பார்த்து பழகிவிட்ட இடம், ஆட்கள் என்று வரும் போது நமது கவனம் தீவிரமாக இருக்காது. அந்த நேரத்தில் நாம் முற்றிலும் எதிபாராத ஒன்று நடந்தால், பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, நமது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளும் முறை... இப்படி அதிர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த அதிர்ச்சிகள் புயல் போன்றவை.

வீசும் புயலில் பல ஆண்டுகளாய் வேரூன்றி நின்ற மரங்கள் சாய்வதில்லையா? அது போல, நமது இடம், நமது நண்பர்கள் என்று நாம் வேர் விட்டு வளர்ந்த பிறகு, வருகின்ற அதிர்ச்சி வேரோடு நம்மைச் சாய்த்து விடுகிறது. அந்த நேரங்களில்... முடிந்த வரை நமக்குத் தெரிந்த, பழக்கமான மற்ற துணைகளைத் தேடி செல்வோம். ஆனால் ஒருவேளை அந்தத் துணைகளும் மாறிவிடுமோ அந்த நண்பர்களும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற

கலக்கம் நமக்கு இருக்கத்தானே செய்யும்.

புயல் வீசும் நேரத்தில் நமது விசுவாசம் எங்கே இருக்கிறது?

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது சுயம்வரத்தைப் பற்றி, அல்லது மற்ற நல்ல காரியங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும். இந்தப் புயல் போய்விடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள் சுயம்வரம், திருமணம் என்று திட்டமிடலாம்.

ஆனால், புயலை மட்டும் மனதில், எண்ணத்தில் பெரிது படுத்தும் போது, வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

இரு வாரங்களுக்கு முன்னால், ஞாயிறு சிந்தனையில் புல்லைப் பற்றிய ஒரு கவிதை சொன்னேன். உங்களுக்கு நினைவிருக்கலாம். தன்னைச் சுற்றி எல்லாமே எரிந்து, அழிந்து சாம்பலாய் போனாலும், அந்த அழிவுக்குத் தன்னையே உட்படுத்தாமல், தலை நிமிர்ந்து நிற்கும் புல்லை, ஆங்கிலக் கவிஞன் தைரியம் என்றான். நான் விசுவாசம் என்றேன்.

புயல் வரும் வேளையில் பூவொன்று சுயம்வரத்துக்குப் புறப்படுவதும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை தரும் செயல்தானே.

 ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் 26 சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் நம்மில் பலருக்கு இன்னும் ஆறாத காயங்களாய் வலித்துக் கொண்டிருக்கும். அந்த பேரழிவின் நடுவிலும் எத்தனையோ விசுவாச அறிக்கைகள் வெளியாயின. கடவுள், மதம் என்ற பின்னணிகளே இல்லாமல் பார்த்தாலும் அந்த நேரத்தில் நடந்த பல அற்புதங்கள் மனித சமுதாயத்தின் மேல் நமது நம்பிக்கையை வளர்க்கும் விசுவாச அறிக்கைகளாக வெளி வந்தன. அப்படி வந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

 சுனாமியில் தன் குழந்தைகள் மூவரையும் சேர்த்து தன் குடும்பத்தில் பத்து பேரை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். டிசம்பர் 26 பரமேஸ்வரனின் பிறந்த நாள். அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வந்த சுனாமி அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர் நம்பிக்கை இழந்து வெறுப்பைச் சுமந்து கொண்டு போகவில்லை. மாறாக, ஒரு சுயம்வரம் ஆரம்பித்தார்கள்... சுயம்வரம் என்பது மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தேடுப்பதுதானே. அந்த சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

சுனாமி அவர்கள் குடும்பத்தை அழித்தாலும், அவர்களது மனித நேயத்தை அழித்துவிடவில்லை. அந்த குழந்தைகளின் மதம், இனம், இவைகளையெல்லாம் கடந்து மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தேடுத்தார்கள். 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 16 பேரைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மனித குலத்தின் மேல் அவர்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினர். மனித குலத்தின் மேல் நமக்குள்ள விசுவாசத்தை வளர்த்திருக்கின்றனர்.

ஆழ்ந்த துன்பத்திலிருந்து வரும் அற்புதமான விசுவாசம் இது. பேரழிவை உண்டாக்கிய புயலின் மையத்திலிருந்து வரும் விசுவாசம் இது.

புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பரமேஸ்வரனுக்கும், சூடாமணிக்கும் புயலுக்கு நடுவிலிருந்து  அமைதி வந்தது.

புயலுக்கு நடுவே, நமது விசுவாசம் எங்கே இருக்கிறது? யோசித்து பார்க்க வேண்டும். அந்தப் புயல் நடுவில் இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை நமக்கெல்லாம் வேண்டும். ஒருவேளை அவர் உறங்கிப் போனதுபோல் தெரிந்தாலும், அவர் அங்கே இருக்கிறார் என்பதே ஒரு பெரும் நிம்மதியைத் தரும்.

இறைவன் எழுந்ததும், புயல் தூங்கிவிடும்.

இறைவன் எழுவார். புயலை அடக்குவார்.

புயல் நேரங்களில், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்வோம்.
புயல் நேரங்களில், நல்லவைகளையேத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தை நடத்துவோம்.







All the contents on this site are copyrighted ©.