2009-09-14 13:53:15

கடவுளில் நாம் கொண்டுள்ள விசுவாசம் அன்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும், திருத்தந்தை


செப்.14,2009. கடவுளில் நாம் கொண்டுள்ள விசுவாசம் திட்டவட்டமான செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு செய்வது நமது மீட்புக்கானச் சான்றாக அமையும் என்று ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

காஸ்தெல் கண்டோல்போவில் அமைந்திருக்கும் பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ நான்காயிரம் திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்களை மையமாக வைத்து தமது சிந்தனைகளை வழங்கிய அவர், இந்நாளைய இறைவார்த்தை இரண்டு முக்கிய கேள்விகளை நம்முன் வைக்கின்றது என்றும் கூறினார்.

“நாசரேத்தூர் இயேசு உங்களுக்கு யார்?, உங்களது விசுவாசம் நீங்கள் செய்யும் அனைத்திலும் பிரதிபலிக்கின்றதா?” ஆகிய கேள்விகளில் இவற்றை உள்ளடக்கிய திருத்தந்தை, வாழ்வுக்கான, அன்புக்கான, உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகின்ற பாதையைக் காட்டுவதற்காக இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்று விளக்கினார்.

ஒருவர் தனது அயலானை தூய மற்றும் தாராள இதயத்தோடு அன்பு செய்யும் போது உண்மையிலேயே அவர் கடவுளை அறிந்திருக்கிறார் என்று சொல்ல முடியும் என்றும் உரைத்தார் அவர்.

மாறாக, ஒருவர் கடவுளை நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு தனது சகோதரர்களை அன்பு செய்யாவிடில் அவர் உண்மையான விசுவாசி அல்ல, அவர் கடவுளில் வாழவும் இல்லை என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட திருச்சிலுவை உயர்த்தப்பட்ட பெருவிழா மற்றும் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் புனித வியாகுல அன்னை விழாக்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்ட அன்னைமரியா சிலுவையடியில் உறுதியுடன் நின்றதை நினைவுகூர்ந்து, அவளின் விசுவாச வாழ்வைப் பின்பற்றி வாழ்வதற்கு அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.