2009-09-14 14:16:00

உலக மக்களாட்சி தினம்


செப்14,2009. 1985ம் ஆண்டில் ஒருநாள். தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உரையை வானொலியில் பதிவு செய்ய வேண்டியிருந்தது. வானொலி நிலையத்துக்கு வந்த அடிகளார், சுவாமிநாதனிடம், இப்பொழுது நீங்கள் எந்தத் துறையில் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், தமிழ் இலக்கிய பிரிவு என்றார். இதற்கு முன்னதாக, விவசாயம், கால்நடை பிரிவு என்றார். சரி கால்நடை என்றால் என்ன? என்று அடிகளார் கேட்க, ஆடுகள் மாடுகள் என்றார். அவற்றை ஏன் கால்நடை என்று சொல்கிறீர்கள்? என்று அடிகளார் கேட்டதும், அவை எல்லாம் காலால் நடக்கின்றன, எனவே அவை கால்நடைகள் என்றார் சுவாமிநாதன். அப்படியானால் மனிதன் காலால் நடப்பதில்லையா என்று அடிகளார் கேட்டதும், அவன் காலால்தான் நடக்கிறான் என்றார். அப்ப அவனையும் கால்நடை என்று சொல்ல வேண்டியது தானே! என்றார் அடிகளார். அன்பர்களே, இந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்? சுவாமிநாதன் அமைதி காத்தாராம். அப்போது குன்றக்குடி அடிகளார் சிரித்துக் கொண்டே சொன்னாராம் :

காலால் நடப்பது மட்டுமே கால்நடைகளின் இயல்பு. ஆனால் மனிதன் அப்படியல்ல. சிந்தனையாலும் கருத்தாலும் அறிவாலும் நாகரீகத்தாலும் பண்பாட்டாலும் படைப்பாற்றலாலும் நடக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. மனிதன், தான் நடக்க வேண்டிய தடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். புவி அவனை நடத்தக் கூடாது. அவன் புவியை நடத்த வேண்டும்.

அடிகளாரின் சிந்தனையைக் கேட்ட கோ.சுவாமிநாதன் அவர்கள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டதாக அவரது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் : அப்படியானால் கருத்தால் நடக்கத் தெரியாத மனிதர்கள் எல்லாம் காலால் மட்டுமே நடக்கத் தெரிந்த விலங்குகள் தானே! அப்படியென்றால் இந்த உலகத்தில் எவ்வளவு கால்நடைகள் என்று.

அன்பர்களே, உண்மையில் மனிதன் சிந்திக்கவும் சிந்தித்தக் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசவும், அப்படி அடுத்தவர் பேசுவது எதுவானாலும் அதனைச் சகித்துக் கொள்வதற்கும் அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளான். அவன் இந்த உரிமைகளை அனுபவிக்கும் பூமியே ஜனநாயகம் அல்லது மக்களாட்சி என்பதாகும். மக்களாட்சி என்பது கருத்துச் சுதந்திரம், சகித்துக் கொள்ளும் கலாச்சாரம் ஆகியவற்றைச் சார்ந்து இருப்பதாகும். அரசியல் ரீதியான சகிப்புத்தன்மை என்பது, பேச்சு சுதந்திரம், திறந்த உள்ளத்தோடு நடத்தப்படும் உரையாடல் மற்றும் பல்வேறு தன்மை கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியதாகும். ஆனால் இந்த மக்களாட்சி பரவலாக, குறிப்பாக இந்நாட்களில் சிறைகளுக்குள்ளும் துப்பாக்கி குண்டுகளுக்குள்ளும் வன்முறையாகப் புதைக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்பதைக் குறிக்கும் “டெமாகிரசி” என்ற ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது. இதற்கு மக்களின் ஆட்சி என்று பெயர். இந்த ஆட்சி தொண்மைகால கிரீஸ் நாட்டில் தோன்றியது என்று ஐரோப்பிய-அமெரிக்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்திய சமஸ்கிருத மொழி அறிஞர்கள், பழங்கால இந்தியாவின் வழக்கத்திலிருந்த கிராமப் பஞ்சாயத்துக்கள்தான் மக்களாட்சிக்கு ஆணிவேர் எனக் கருதுகிறார்கள். ஆனால் மக்களாட்சி என்று சொல்லிக் கொள்ளும் நாடுகளில்தான் இன்று எத்தனை அரசியல் விளையாட்டுகள்.



தென்னாப்ரிக்காவில் ஒரு நெல்சன் மண்டேலா. மியான்மாரில் ஒரு ஆங் சான் சு கி. ஜனநாயகவாதியான சு கி, கடந்த 19 ஆண்டுகளில் 11 ஆண்டுகளுக்கு மேல் அந்நாட்டு இராணுவ அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மியான்மாரில் மக்களாட்சி யைக் கொண்டு வர இவர் எடுத்த முயற்சிகளைப் பாராட்டும் விதமாக 1991ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருதும் வழங்கப்பட்டது. இவரின் வீட்டுக் காவல், கடந்த ஆகஸ்டில் மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்பர்களே, இவ்வாறு மக்களாட்சி சவாரி செய்யப்படுவதை நிறுத்தும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 2007ம் ஆண்டில், செப்டம்பர் 15ம் தேதியை அனைத்துலக மக்களாட்சி தினமாக அறிவித்தது. அத்தோடு, மக்களாட்சி என்பது பொதுவுடமை. இதனைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய உடனடித் தேவையை இந்தச் சர்வதேச நாள் நினைவுபடுத்துகின்றது என்று கூறியது. ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் நிறுவனங்களும் இந்நாளைச் சிறப்பிக்கவும் அழைப்பு விடுத்தது. “மக்களாட்சியும் அரசியல் சகிப்புத்தன்மையும்” என்பது 2009ம் ஆண்டின் இந்த உலக நாளுக்கான தலைப்பாகும்.



ஒழுங்கு, சகிப்புத் தன்மை, ஒத்துப்போவது - இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை! நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! மாறாக நம்மோடு மாறுபடுகிற, அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை. அதற்குப் பெயர்தான் ஜனநாயகம், மக்களாட்சி. இன்று பெரும்பாலும் சுதந்திரமும் மக்களாட்சியும் மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப்படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப் பழி வாங்கப்படுகின்றன. அரசியல் சகிப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. அரசியல் தலைவர்கள், எதிர்க் கட்சிகளுக்கும் அரசியலுக்கும் எந்த இடமும் கொடுப்பதற்கு மறுக்கும் போது, தங்கள் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களுடன் முன்னுக்கு வரும் போது கட்சிகள் அவர்களை ஒடுக்கும் போது இந்த அரசியல் சகிப்பற்றதன்மை தெளிவாகத் தெரிகின்றது. எடுத்துக்காட்டுக்கு இலங்கையை நோக்கலாம். அந்நாட்டில் நடந்த கடந்த இரண்டு நாள் செய்திகளே இதற்குச் சான்றாக இருக்கின்றன.

“இலங்கை கிழக்கு மாகாண அமைச்சர்கள் இணைந்து அரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில், நாங்கள் புதிதாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்றே கேட்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்து, “இலங்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதை மேற்கத்திய நாடுகளுக்கு தெரிவித்தார், அகதிகளுக்கான உதவிகளின் பற்றாக்குறைகள் குறித்து தகவல்களை வெளியிட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முக்கிய தூதரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் மெக்கி இலங்கையில் இருந்து கடந்த ஜூலையில் வெளியேற்றப்பட்டுள்ளார்”. ஐ.நா. அதிகாரிகளே அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை! இலங்கையில் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் போன்ற மூத்த பத்திரிகையாளர்களுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த உண்மை.

மகாத்மா காந்தியடிகள் ஏர்வாடா சிறையில் இருந்தபோது, அவர் குளிப்பதற்காக உடனிருந்த கைதி ஒருவர் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். நீர் சூடாகியதும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை அகற்றினார். அணைக்கப்படாத நிலையில் அடுப்பு வீணாக எரிவதைக் கண்ட அண்ணல், உடனே அதை அணைக்கும்படி அந்தக் கைதியை ஏவினார். அப்போது அங்கிருந்த சிறையதிகாரி, 'அடுப்பெரிக்கும் கரி அரசு வாங்கித் தருவது. அது வீணாவதற்காக ஏன் இவ்வளவு பதற்றமடைகிறீர்கள்?' என்று சிரித்தபடி கேட்டார். அதைக் கேட்ட காந்தியடிகள், 'அரசுப் பணம் என்பது மக்களின் பணம். அதில் ஒரு செப்புக் காசும் விரயமாவதை நான் விரும்பமாட்டேன்!' என்றார். பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனுக்கு இப்போது காங்கிரஸ்காரர்கள் நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தார்கள். கக்கன், பத்தாண்டுகள் அமைச்சராக இருந்த பின்பு சாதாரணப் பயணியாக பேருந்துகளில் பயணித்திருக்கிறார்.

அரசியல் ரீதியாகச் சகிப்புத்தன்மை தேவையென்றால் இத்தகைய தலைவர்கள் நாடுகளில் மீண்டும் உருவெடுக்க வேண்டும். ஜான் எப் கென்னடி சொன்னார் : சகிப்புத்தன்மை என்பது, ஒருவருடைய நம்பிக்கைகளை ஏற்பதாகும், அதோடு இது பிறரை அடக்குபவரை அல்லது நசுக்குபவரை கண்டனமும் செய்கின்றது என்று. எனவே மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும். இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான மக்களாட்சியும் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது. எந்த அளவுக்கு ஒரு சமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே மக்களாட்சி வளர்ச்சி பெறுகிறது. சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் மக்களாட்சியும் தழைக்கக உதவ முடியும்.

அந்த வகுப்பறையில் வேதியல் ஆசிரியர் ஹைட்ரஜன் சல்பைடு குடுவையைத் திறந்தார். குடலைப் புரட்டும் அழுகிய முட்டை நாற்றம். மாணவர்கள் மூக்கைப் பிடித்தனர். அதை அறிமுகப்படுத்திய ஆசிரியர் சொன்னார்- வேதியல் மாணவர்களே, நீங்கள் வேதியல் அறிவோடு சகிப்புத்தன்மையிலும் வளர வேண்டும். அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும் என்று. சார்... சகிப்புத்தன்மையில் எப்படி வளர்வது என்று மாணவர்கள் கேட்டார்கள். இப்படித்தான் என்று சொல்லி அவர் தனது ஆட்காட்டி விரலால் நாற்றமெடுக்கும் ஹைட்ரஜன் சல்பைடு திரவத்தைத் தொட்டுச் சப்பிக் காண்பித்தார். மாணவர்கள் முகத்தைச் சுளித்தனர். ஆசிரியர் தொடர்ந்தார். நான் மறுபடியும் செய்கிறேன். கவனியுங்கள். அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். சகிப்புத்தன்மையில் வளர இது சிறந்த பயிற்சி என்றார். ஆசிரியர் 2ம் முறை செய்து காட்டினார். மாணவர்கள் தயக்கம் காட்டவே மூன்றாம் முறையும் செய்தார். இம்முறை மாணவர்கள் அதை ஒவ்வொருவராகச் சூப்ப ஆரம்பிக்க வயிறு குமட்டி வாந்தி எடுத்தனர். அப்போது மாணவர்கள், சார் உங்களால் மட்டும் எப்படி முடிந்த்து என்று கேட்க மாணவர்களே நான் அமிலத்தைத் தொட்டது ஆள்காட்டி விரலால். ஆனால் சப்பியது அந்த விரலை அல்ல. நடு விரலை. ஆம். சகிப்புத்தன்மை தேவைதான். அதைவிட உற்று நோக்கல் தேவை என்றார்.

ஆம். உன்னிப்பாய் உற்று நோக்கித் தீர்க்கப்படாத பிரச்சனை குமட்டத்தான் செய்யும். மக்களாட்சி தழைக்க மக்கள் பிரச்சனைகள் உன்னிப்பாய் உற்று நோக்கப்பட வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.