2009-09-12 17:41:20

ஞாயிறு சிந்தனை 


கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த டயோஜீனஸ் பற்றி ஒரு சம்பவம். ஏதென்ஸ் நகர வீதிகளில் இவர் பகல் நேரத்தில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு அலையும் போது, மக்கள் இவரிடம் "என்ன தேடுகிறீர்கள்?" ன்னு கேட்டால், "நல்ல மனிதர்களைத் தேடுகிறேன்." அப்பிடீன்னு சொல்வாராம்.

மனிதர், மனிதரைத் தேடும் எத்தனையோ கதைகள் நமகெல்லாம் தெரியும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்களும் நம்ம எல்லாருக்கும் உண்டு. நமது தேடல்களில் ஒரு முக்கியமான கேள்வி நம் மனதில் எழுந்திருக்கும். அதுதான், மத்தவங்க என்னைப் பத்தி என்ன நினைக்கிறாங்க. ஒரு சிலருக்கு இதுவே வாழ்க்கை பிரச்சினையாகவும் மாறிவிடும். இது போன்ற ஒரு சம்பவத்தைத் தான் இன்று நற்செய்தியில் வாசித்தோம்.

ஒரு கற்பனை சம்பவத்துடன் இந்த ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம். தலைவன் ஒருவன் நண்பர்களோடு நடந்து கொண்டிருக்கிறேன். திடீரென, நண்பர்கள் பக்கம் திரும்பி, "மக்கள் என்னைப்பத்தி என்ன சொல்றாங்க?" ன்னு கேட்கிறான். நண்பர்கள் ஒரு சில நிமிடங்கள் திகைச்சு போய் நிக்கிறாங்க. கொஞ்சம் மென்னு முழுங்கி, ம்ம்... வந்து... என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் மனசுல ஓடுற என்னகள் பலவாறாக இருக்கும். அந்தத் தலைவன் மக்களுக்கு நல்லது செய்யும் தலைவனா இருந்தா, துவக்கத்தில் ஏற்படும் தயக்கத்திற்கு பிறகு, பல உண்மை பதில்கள் வெளிவரும்.

உதாரணத்திற்கு, மகாத்மா காந்தியைப் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?

மதர் தெரசாவைப் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?

அப்துல் கலாம் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?

சச்சின் டெண்டுல்கர் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?

இந்த கேள்விகளுக்கு எளிதாக பதில்கள் சொல்லலாம். அவர்கள் செய்த பணி, அல்லது அடைந்த வெற்றிகள் இவைகளுடைய அடிப்படையில் இந்த பதில்கள் சொல்லப்படும்.

ஆனால் அந்தத் தலைவன் ஒரு தாதாவாகவோ அல்லது ஒரு அரசியல் வாதியாகவோ இருந்தால்... இந்த கேள்விக்கு உண்மையான பதில் சொல்ல முடியாமல், அவனுடைய நண்பர்களே தடுமாறி போவார்கள். நம்ம கற்பனையைத் தொடர்வோம்.

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், தலைவன் மீண்டும் திரும்பி, "ஜனங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்னைப் பத்தி என்ன சொல்றீங்க" ன்னு கேட்டால், அந்த நண்பர்களெல்லாம் அப்படியே திகைத்துப் போய்  நின்றுவிடுவார்கள். உடன் பதில்கள் வராது... ஏன்னா இது ஆழமான கேள்வி. நாக்கு நுனியிலிருந்து வார்த்தைகளைக் கொட்டி பதில் சொல்லி விடலாம். ஆனால், அந்த வார்த்தைகளில் போலித்தனம் தெரியும். இந்தக் கேள்விக்கு ஆழமான மனதில் இருந்து பதில் வரணும்.

"உடனே பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல... யோசிச்சு சொல்லுங்க"ன்னு தலைவன் சொன்னதும் அந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம்  எளிதாக மாறும். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலைச் சொல்ல ஆரம்பித்தால், மற்றவர்களும் அதைப் போல பேசி, அங்கு ஒரு நல்ல கருத்து பரிமாற்றம் நடைபெறும். வெறும் சிந்தனை அளவில் எழும் வார்த்தைகளாக இல்லாமல், உள்ளத்தைத் திறந்து வரும் உண்மைகளாக இருக்கும்.

நாம் நமது நண்பர்களோடு, அல்லது நமது குடும்பங்களில் இது போன்ற பகிர்வுகளை வளர்த்துக்கொண்டால், நம்மைப் பற்றி நமக்கே தெரியாத பல உண்மைகள் வெளிவரும். பல பிரச்சனைகள் தீரும். ஆனால், இது ஒரு பெரிய சவால். முயன்றுதான் பார்க்கலாமே!

மீண்டும் நமது நற்செய்திக்கு வருவோம். இன்று இயேசு நற்செய்தியில் கேட்கும் இரு முக்கியமான கேள்விகள்: மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? நீங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.

குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவனை பங்கு தந்தை சந்திக்கிறார். காரணம் கேட்கும் போது அவர் யேசுவைச் சந்தித்தாக சொல்கிறார்.

பங்கு குருவுக்கும், அவருக்கும் இடையே எழும் உரையாடல்:

இயேசு எங்கே பிறந்தார்?

ம்... எருசலேம்ல பிறந்திருக்கலாம்.

இயேசு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

ம்... ஒருவேளை, 50 60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.

பங்கு தந்தைக்கு கோபம். இந்த சாதாரண கேள்விகளுக்கு பதில் தெரியலை.

மனம் மாறிய அவர் சொல்லுவார். "நீங்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது. அனால் ஒன்று தெரியும். என் வாழ்க்கை இதுவரை பயங்கரமாக இருந்தது. அனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு காரணம் இயேசு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்."

பங்கு தந்தை கேட்ட கேள்விகளெல்லாம் அறிவுப்பூர்வமானவை. மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? விவிலியம் யேசுவைப் பற்றி என்ன சொல்கிறது? மறை கல்வி, இறையியல், புத்தகங்கள் இவை யேசுவைப் பற்றி என்ன சொல்கிறது? அறிவுப் பூர்வமாகத் தெரிந்துகொள்ளும் உண்மைகள், கருத்துகள் ஆகியவை வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால், இவைகளைவிட, மிக முக்கியமான கேள்வி: நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.

முதல் வகையில் நாம் பெறுகின்ற ஞானம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். இரண்டாவது வகையில் நாம் பெறுகின்ற ஞானம் நமது வாழ்க்கையை மாற்றும். இந்த சவாலைத்தான் இயேசு இன்று நமது நற்செய்தி  வழியாக நமக்குத் தருகிறார். பேதுரு அன்று சொன்னது ஆழமான பதில். ஆனால் அந்த பதிலோடு அவர்கள் பரிமாற்றம் அன்று நின்றுவிடவில்லை.

இயேசு தொடர்ந்து சொன்னது: "என்னைப் பற்றி ஓரளவு உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லது. இன்னும் என்னை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், என்னைப் போல நீங்களும் துன்பப்பட வேண்டும். என்னையும் என் வார்த்தைகளையும் சரியாக புரிந்து கொண்டால், என் செயல்பாடுகளிலும், என் சிலுவையிலும் உங்களுக்கு பங்கு உண்டு."

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அன்பர்களே, இந்த ஞாயிறு சிந்தனையின் இறுதியில் நான் சொல்ல விரும்புவது இதுதான். நம் நண்பர்கள் மத்தியிலோ, நமது குடும்பங்களிலோ வெறும் உதட்டளவு வார்த்தைப் பரிமாற்றங்கள் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பரிமாற்றங்கள் அதிகமாக வேண்டும்.

இந்த வகைப் பரிமாற்றங்களிலிருந்து நம்மைப் பற்றி இன்னும் அதிகத் தெளிவு கிடைக்கும். அதேபோல் நமது பரிமாற்றங்களில் நாம் நம்புகின்ற கடவுளைப் பற்றியும் பேசுவோம். நம்மைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், யேசுவைப் பற்றியும் தெளிவும், ஆழமும் கிடைக்கும் போது, அந்த எண்ணங்கள், உணர்வுகள் நமது வாழ்க்கையைக் கட்டாயம் மாற்றும்.

இந்தப் புதுமை நமக்கெல்லாம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.