2009-09-12 16:11:45

கடவுளின் விசுவாசமுள்ள ஊழியராகிய ஆயர், தனக்காக அல்ல, தனது சமூகத்திற்காக உழைப்பவர்


செப்.12,2009. கடவுளின் விசுவாசமுள்ள ஊழியராகிய ஆயர், தனக்காக அல்ல, தனது சமூகத்திற்காக உழைப்பவராக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

விசுவாச மனிதராக இருக்கும் ஒருவர், தனது சுய இலாபங்கள் பற்றிச் சிந்திக்க மாட்டார், மாறாக உண்மையாம் கிறிஸ்துவைத் தேடுகின்ற விவேகத்தையும் நன்மைத்தனத்தையும் கொண்டவராய் இருப்பார், இதன் மூலம் எப்பொழுதும் கடவுள் பக்கம் அவர் ஈர்க்கப்படுபவராகவும் இருப்பார், இவையே விசுவாசமான ஊழியரின் பண்புகள் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பண்புகளை ஆயர்கள் அணிந்திருக்க வேண்டும் என்று, தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை ஐந்து குருக்களை, ஆயர்களாகத் திருநிலைப்படுத்திய திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் கடவுளின் ஆவியால் நிறைந்திருந்து அவரில் வாழ வேண்டும், ஏழைகளுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும், மனிதனுக்கு வாழ்வளித்து அவனைக் குணப்படுத்தும் உண்மையான விடுதலையையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் உரைத்தார்.

குருத்துவத்தின் அனைத்துக் கூறுகளையும், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்ற ஒரே வரியில் தொகுத்து வழங்கினார் திருத்தந்தை.

விசுவாசம், விவேகம், நன்மைத்தனம் ஆகிய மூன்று பண்புகளை நம் ஆண்டவர் இயேசு தம் ஊழியரிடம் எதிர்பார்க்கிறார் என்றுரைத்த அவர், இயேசு கிறிஸ்துவோடு நல்லுறவு கொண்டு வாழ்வதன் மூலம் நாம் நல்ல ஊழியர்களாக மாறுகிறோம் என்றும் புதிய ஆயர்களிடம் கூறினார்.

லெபனனுக்கான புதிய திருப்பீட தூதுவர் பேரருட்திரு கபிரியேல் ஜோர்தானோ காச்சா, வெனெசுவேலாவுக்கான புதிய திருப்பீட தூதுவர் பேரருட்திரு பியத்ரோ பரோலின், புருண்டிக்கான புதிய திருப்பீட தூதுவர் பேரருட்திரு பிராங்கோ கோப்போலா, ப்ரஸ்காத்தியின் புதிய ஆயர் ரபேயேல்லோ மார்த்தினெல்லி, திருப்பீட தொழில் அலுவலகத் தலைவர் பேரருட்திரு ஜார்ஜோ கோர்பெல்லினி ஆகியோரை இச்சனிக்கிழமை ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 








All the contents on this site are copyrighted ©.