2009-09-09 16:14:51

எழுத்தறிவு பெற்ற இந்தியா' என்ற புதிய திட்டம் ஆரம்பம்


செப்.09,2009. ஆறு கோடிப் பெண்கள் கல்வியறிவு பெறும் வகையில் "எழுத்தறிவு பெற்ற இந்தியா' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் தொடங்கிவைத்தார்.

சர்வதேச எழுத்தறிவு தினத்தன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மன்மோகன் சிங், அடுத்த 5 ஆண்டுகளில் 6 கோடிப் பெண்கள் உள்பட 7 கோடிப் பேரை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது என்றுரைத்த பிரதமர் மன்மோகன் சிங், இத்திட்டத்தின் மதிப்பு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும், இதில் மத்திய அரசு 5 ஆயிரம் கோடியும், மாநில அரசுகள் 1,500 கோடியும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

உலகில் கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என்றும், பெண் கல்வியறிவு விகிதம் குறைந்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்றும், இந்தியப் பெண்களில் பாதிப்பேருக்கு எழுத, படிக்க தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டம், பெண் கல்வியில் பின்தங்கிய 365 மாவட்டங்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 33 மாவட்டங்களில் உள்ள 1.75 இலட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், நாட்டில் 30 கோடி மக்கள் கல்வியறிவு பெறதாவர்களாக உள்ளனர், இத்திட்டத்தை செயல்படுத்த 70 லட்சம் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 10 கோடி தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்அறிவித்தார்.

இத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பாலின வேறுபாட்டை 21 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைத்து, ஒட்டு மொத்த கல்வியறிவு வீதத்தை 80 விழுக்காடாக எட்டுவதே முக்கிய நோக்கம் என்று கபில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.