2009-09-09 16:08:47

இந்திய திருச்சபையின் முதல் மறைபரப்பு மாநாடு


செப்.09,2009. வருகிற அக்டோபர் 14 முதல் 18 வரை இந்திய திருச்சபை அதன் முதல் மறைபரப்பு மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

மும்பை, கோரேகாவுன் புனித பத்தாம் பத்திநாதர் கல்லூரியில் நடைபெறவிருக்கின்ற இம்மாநாடு, இந்திய திருச்சபை எல்லா மட்டங்களிலும் ஆற்றி வரும் தனது மறைப்பணியை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று இதன ஏற்பாடு செய்வோர் கருத்து தெரிவித்தனர்.

இந்த முதல் மறைபரப்பு மாநாடு குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தலைவரான மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ், இம்மாநாடு, இந்தியாவில் திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டாடுவதாய் இருக்கும் என்று கூறினார்.

அதேசமயம், இந்திய திருச்சபையின் விசுவாசப் பயணத்தைப் புதுப்பிப்பதாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

“உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக” என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாடு, இந்தியாவில் கிறிஸ்தவத்தின் தனித்தன்மையின் ஆழத்தை பறைசாற்றுவதற்கு உதவும் என்று தான் நம்புவதாகவும் மும்பை கர்தினால் கூறினார்.

இந்திய திருச்சபையின் மறைப்பணி இந்தியாவோடு மட்டும் நின்றுவிடாமல், ஆசியத் திருச்சபைக்கு அது அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 








All the contents on this site are copyrighted ©.