2009-09-08 16:48:22

இலடசக்கணக்கான பாகிஸ்தான் கத்தோலிக்கர் பயங்கரவாதிகளின் மனமாற்றத்திற்காக அன்னைமரியிடம் செபித்தனர்


செப்.08,2009. பயங்கரவாதிகளின் மனமாற்றத்திற்காகவும் தங்களைத் துன்புறுத்துவோருக்காகவும் இலடசக்கணக்கான பாகிஸ்தான் கத்தோலிக்கர் அன்னைமரியிடம் செபித்தனர்.

மரியின் நகரம் என அழைக்கப்படும் மரியம்பாட் கிராமத்திலுள்ள தேசிய மாதா திருத்தலத்தில் செப்டம்பர் 8ம் தேதி சிறப்பிக்கப்படும் அன்னைமரியின் பிறப்பு விழாவை முன்னிட்டு திருப்பயணம் மேற்கொண்ட திருப்பயணிகள், கிறிஸ்தவர்க்கு எதிராகச் செயல்படுவோருக்காகவும் செபித்தனர்.

இத்திருப்பயணம் பற்றி யூக்கா செய்தி நிறுவனத்திடம் பேசிய, பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலிய கழகத்தின் செயலர் அருள்திரு இம்மானுவேல் ஆசி, கத்தோலிக்கர் அமைதியின் கருவிகளாக மாறுவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்று கூறினார்.

அந்நாட்டில் அமலில் இருக்கும் தேவ நிந்தனை சட்டத்தின் கீழ் அப்பாவி பொது மக்கள் நசுக்கப்படுவதை நிறுத்துவதற்கு அச்சட்டத்தில் மாற்றம் தேவை என்றும், அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் அக்குரு கூறினார்.

தேவ நிந்தனை சட்டத்தின் கீழ் பாதிக்கப்படுவதில் பாதிப்பேர் ஏழைக் கிறிஸ்தவர்கள் என்றும் அக்குரு குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.