2009-09-08 16:49:26

இயேசு சபை மறைபோதகர் அருள்தந்தை கமில் புல்கே பிறந்ததன் நூறாம் ஆண்டை இந்தி மொழி வல்லுனர்கள் சிறப்பித்தனர்


செப்.08,2009 இந்தியாவில் சமயக் கதைகளைச் சாதாரண மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சேவை செய்துள்ள இயேசு சபை மறைபோதகர் அருள்தந்தை கமில் புல்கே பிறந்ததன் நூறாம் ஆண்டை இந்தி மொழி வல்லுனர்கள் சிறப்பித்துள்ளனர்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய இந்தி மொழி நிபுணர் நளினி புரோஹிட், அருள்தந்தை புல்கே, விவிலியக் கதைகளையும் இராமயணத்தையும் பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு உதவியுள்ளார் என்று கூறினார்.

இக்குரு பெல்ஜியத்தில் பிறந்தாலும் இந்தியாவின் ஆபரணமாக இருக்கிறார் என்று மகத பல்கலைகழகத்தின் புபேந்திர கலாசி பாராட்டினார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த அருள்தந்தை புல்கே, இளம் குருத்துவ மாணவராக 1935ல் இந்தியா வந்தார். தனது பெரும்பாலான வாழ்க்கையை ராஞ்சியில் செலவிட்ட அவர் 1951ல் இந்திய குடிமகனானார். “ராம் கதையின் மூலமும் அதன் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் அவர் தனது முனைவர் பட்டத்திற்கென செய்த ஆய்வு, சமஸ்கிருத மொழியிலான இராமாயணத்தின் சிறந்த விளக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவர், விவிலியத்தை இந்தி மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். இதனை வட இந்திய கிறிஸ்தவ சபைகள் இன்றும் பயன்படுத்துகின்றன.

இன்னும், இவரது படைப்பான நாற்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட ஆங்கிலம்-இந்தி அகராதியும் 1968ல் வெளியிடப்பட்டது. இவர் 1982ம் ஆண்டு தனது 73 வது வயதில் புதுடெல்லியில் இறந்தார்.










All the contents on this site are copyrighted ©.