2009-09-07 16:38:03

இறைமையில் வாழ்வோம்


செப்.07,2009. இவ்வுலகில் அனைத்தும் இறைவனிடமிருந்தே புறப்படுகின்றன. அவரிடமே அவை சங்கமிக்கின்றன! இந்த இறைவனை இரண்டு விதமாகப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். ஒன்று, இறைமை என்பது “அதுவல்ல”, “அதுவல்ல” என்று பார்ப்பது. மற்றொன்று எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் இறைமையைப் பார்ப்பது. அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஊர்வன, பறப்பன, நீந்துவன, மரம் செடி கொடி என அனைத்திலும் இறைமையைக் கண்டார். அவற்றை சகோதர, சகோதரிகளே! என விளித்தார். வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர், கடும் நிலத்தைப் பிளந்து உழுதுகொண்டிருக்கின்ற பாமர உழவனிலும், கற்களை உடைத்துச் சாலை அமைக்கின்ற ஏழையிலும், வெயிலில் காய்கின்ற, மழையில் நனைகின்ற, உடை கிழிந்து, புழுதி படிந்து கிடக்கின்ற மனிதனிலும் இறைமையைக் கண்டார். நம் முண்டாசுக் கவிஞன் பாரதியோ, காக்கைச் சிறகினில், பார்க்கும் மரங்களில், கேட்கும் ஒலியில், தீக்குள் என எல்லாவற்றிலும் இறைமையைக் கண்டார். இவ்வாறு காற்றின் இசையிலும் சலசலக்கும் இலைகளின் சப்தத்திலும், ஆற்றின் பாய்ச்சலிலும், பறவைகளின் கூவுதலிலும், குழந்தையின் சிரிப்பிலும், தாயின் தாலாட்டிலும், ஏற்றம் இறைப்பவனிலும், நாற்று நடும் பெண்களின் தெம்மாங்கிலும் இறைமையின் கூறுகள் தெறித்து விழுவதை உணர முடிகின்றது.

ஆனால் இந்த இறைமையின் கூறுகளை உணராத வாழ்வு எப்பொழுதுமே சூன்யமாகி விடுகின்றது. இந்த இறைமையை உணராத மனித மனங்களின் செயல்கள் வன்முறைகளாக, பயங்கரவாதங்களாக வெளிப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் நாத்சி வதைப்போர் முகாம்கள், இப்பூமியில், தீமை மற்றும் நரகத்தின் உச்சகட்ட அடையாளங்கள், நாத்திகத்தின் வெளிப்பாடுகள் என்று கடந்த மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இஞ்ஞாயிறன்றும் அவர், இறைவனின் பிரசன்னத்தின் பயன்கள் பற்றியே பேசியிருக்கிறார். இறைவன் எங்கு இருக்கின்றாரோ அங்கு பார்வையற்றவர் பார்வை பெறுவர், காது கேளாதவர் செவித்திறன் பெறுவர், கால் ஊனமுற்றோர் மான்கள் போலத் துள்ளிக் குதித்து ஓடுவர். எல்லாம் புதுப்பிறப்படையும், வறண்ட பாலைநிலத்தை நீரூற்று வளமாக்குவது போல, ஒவ்வொன்றும் புது வாழ்வுக்குத் திரும்பும் என்றார RealAudioMP3 . கடவுளோடும் பிறரோடும் தொடர்பு அறுத்து வாழும் இதயங்களைப் பாலை நிலங்கள் என்று சொல்லலாம். மனித இதயம் கடவுளோடு உறவின்றி, அவர் பற்றிய எண்ணங்கள் இன்றி வாழும் போது நிஜத்தைப் பார்க்க இயலாமல் குருடாகி விடும். உதவிக்காக கூக்குரலிடும் பிறரின் புலம்பல்களைக் கேட்க முடியாதபடி காதுகள் மந்தமாகிவிடும். எனவே இறைப் பிரசன்னத்தில் வாழும் பொழுது, இறைவன் எங்கும் எதிலும் எல்லாரிலும் இருக்கிறார் என்ற மெய்யுணர்வில் வாழும் பொழுது, புதிய இறைவாழ்வால் வறண்ட இதயத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும் என்று திருத்தந்தை கூறினார்.

உரோமை மாநகருக்கு வடக்கே ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது வித்தெர்போ என்ற நகர். இது பாப்பிறைகளின் வரலாற்றில் முக்கியமான நகரமும்கூட. அக்காலத்தில் திருத்தந்தையர் உரோமையின் மீதான தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் எதிர்கொண்ட இன்னல்களின் போது அவர்களுக்குப் புகலிடம் தந்த நகரம் இது. 1145ம் ஆண்டு முதல் 1146ம் ஆண்டு வரை திருத்தந்தையாக பணியாற்றிய பாப்பிறை 3ம் யூஜின், முதன்முறையாக இந்த வித்தெர்போ நகரில் அடைக்கலம் தேடினார். 1261க்கும் 1281க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் திருச்சபையை வழி நடத்திய எட்டு திருத்தந்தையர்களுள் ஐந்து பேர் வித்தெர்போவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 1261ல் திருத்தந்தை 4ம் உர்பானும், 1271ல் திருத்தந்தை 10ம் கிரகரியும், 1276ல் திருத்தந்தை 21ம் அருளப்பரும், 1277ல் திருத்தந்தை 3ம் நிக்கோலாசும், 1281ல் திருத்தந்தை 4ம் மார்ட்டினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1268ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் கிளமெண்ட் இறந்த பின்னர் வித்தெர்போவில் கூடிய கர்தினால்கள் 33 மாதங்கள் வரை புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே அந்நகர அதிகாரிகள், அவர்கள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வரை, அவர்கள் கூடியிருந்த அறையைப் பூட்டி அவர்களுக்கான உணவு, தண்ணீர் ஆகியவற்றைக் குறைத்து, தூய ஆவி தாராளமாக இறங்கி வருவார் என்று சொல்லி அவ்வறையின் மேல் கூரையையும் எடுத்துவிட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை கிரகரி, இனிமேல் பாப்பிறைத் தேர்வுகள் கான்கிளேவ் என்ற பூட்டிய அறைக்குள் இடம் பெறும் என்பதைத் திருச்சபை சட்டமாகக் கொண்டு வந்தார். திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கர்தினால்கள் கூடுவது, 1271ம் ஆண்டு வரை, கான்கிளேவ் என அழைக்கப்படவில்லை. கான்கிளேவ் என்றால் பூட்டும் சாவியும் என்ற அர்த்தமாகும்.

1257ம் ஆண்டு முதல் 1281ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் திருத்தந்தையரின் தலைமைப்பீடமாக இருந்த இந்த வித்தெர்போ நகர், திருத்தந்தையரின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. சிமினி மற்றும் வோல்சினி மலைகளால் சூழப்பட்ட இந்த நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள பாப்பிறைகளின் மாளிகையையும் கான்கிளேவ் அறையையும் பார்வையிட்டார். பின்னர், Faul பள்ளத்தாக்கில் திருப்பலி நிகழ்த்தினார். அத்திருப்பலி மறையுரையில்தான் இறைப்பிரசன்னத்தில் வாழ்வதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துச் சொன்னார். காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு குணமாக்கியதிலிருந்து, மனிதன் தனது தன்னலத்தால் உருவாக்கிக் கொண்ட தனிமையையும் கடவுளோடு தொடர்பு கொள்ள சக்தியற்று இருப்பதையும் அகற்றுவதற்கு அவர் மிகுந்த ஆவல் கொள்கிறார் என்பதை நம்மால் காண முடிகின்றது. அத்துடன், நல்ல செவித்திறனும் பேச்சுத் திறனும் உரையாடலும், ஒன்றிப்புத் திறனும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்க மேலும் விரும்புகிறார் என்றும் உணருகிறோம் என்று திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு மாலை வித்தர்போவிலிருந்து பாக்னோரெஜ்ஜியோ சென்றார். புனித பொனவெந்தூரின் பிறப்பிடமான அந்நகரின் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள அப்புனிதரின் தோள்பட்டை திருப்பொருளை முதலில் தரிசித்தார். பின்னர் பாக்னோரெஜ்ஜியோ மக்களுக்கு உரையாற்றிய போது, புனித பொனவெந்தூரின் இறை தேடல் பற்றி எடுத்துச் சொன்னார். இந்தப் புனிதர் களைப்படையாமல் கடவுளைத் தேடியவர். அவர் பாரிசில் படித்தது முதல் இறக்கும் வரை தொடர்ந்து இறைவனைத் தம் வாழ்வில் தேடியவர். நமது சக்தியெல்லாம்கூட்டி கடவுளை நோக்கி மனதை எழுப்ப வேண்டும் என்பதற்காகவே அவர் நாம் எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில் இருக்கிறார் என்று சொன்னவர். செயலற்ற சொல், வாழ்வில் வெளிப்படாத வழிபாடு, வியப்பற்ற தேடல், பக்தியற்ற தொழில், அன்பற்ற அறிவியல், அடக்கமற்ற அறிவு, இறையருளற்ற படிப்பு, இறைவனால் தூண்டப்படாத ஞானம் போன்ற தோற்றம் போன்றவை வீண். இந்தக் குறைகள் இயேசு கிறிஸ்துவினால் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றவர். இவ்வாறு இப்புனிதர் பற்றி கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் வேரூன்றப்பட்ட விசுவாசக் கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். RealAudioMP3

புனித பொனவெந்தூர், கடவுளைத் தேடியதோடு, புனித பிரான்சிஸ் அசிசியைப் பின்பற்றி படைப்பின் பாடகராகவும் இருந்தார். படைப்பில் இறைவனின் ஞானத்தையும் எல்லா வல்லமையையும் நன்மைத்தனத்தையும் கண்டார். கடவுளின் அன்பு மனிதருக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டிருப்பதையும் அவர் உணர்த்தினார். அத்துடன் இப்புனிதர் நம்பிக்கையின் தூதுவராகவும் இருந்தார் என்றும் திருத்தந்தை கூறினார். பின்னர் இந்நகர மக்களை ஆசீர்வதித்து காஸ்தெல் கன்டோல்போ கோடை விடுமுறை இல்லத்திற்குத் திரும்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை புனித பொனவெந்தூர் பிறப்பிடத்துக்குச் சென்றதற்கு ஒரு காரணம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் ஜெர்மனியில் முனைவர் பட்டத்திற்கு ஓர் ஆய்வு கட்டுரையும் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு மற்றுமோர் ஆய்வுக் கட்டுரையும் எழுத வேண்டியிருந்தது. எனவே ஜோசப் ராட்சிங்கர் என்ற நமது திருத்தந்தை 16ம் பெனடிக்ட RealAudioMP3 ், அவரது இரண்டாவது ஆய்வுக் கட்டுரைக்கு புனித பொனவெந்தூரின் எழுத்துக்களில் கோட்பாட்டு வெளிப்பாட்டையே எடுத்திருந்தார். இதனால் அப்புனிதர் மீது அவருக்குத் தனிப்பற்று உண்டு என்று சொல்கிறார்கள். திருச்சபையின் மறைவல்லுனரான இப்புனிதரின் உடல் பிரான்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் இயற்பெயர் ஜான். இவர் குழந்தையாக இருந்த போது கடும் நோயால் துன்புற்றார். புனித பிரான்சிஸ் அசிசி இவரைப் புதுமையாகக் குணப்படுத்தினார். அதோடு இவரால் ஏராளமான நன்மைகள் வரும் என்றும் முன்னறிவித்தார். பொனா என்றால் நன்மைகள் என்றும் வெந்தூரா என்றால் வரவிருக்கின்றன என்றும் அர்த்தம்.

அங்குலிமால் என்ற பெரிய கொள்ளைக்காரன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் ஒரு சமயம் புத்தரைக் கொன்று விடுவதாக மிரட்டினான். அப்படியென்றால் எனது கடைசி விருப்பத்தைப் பூர்த்தி செய் என்றார் புத்தர். அந்த மரத்திலிருந்து அந்தக் கிளையை வெட்டு என்றார். அவனும் ஒரே வீச்சில் வெட்டி முடித்தான். இப்போது அந்தக் கிளையை மீண்டும் அதே இடத்திலேயே வை என்றார் புத்தர். கொள்ளைக்காரன் சிரித்தான். அப்படி யாராலும் செய்ய முடியும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம் என்றான். அதற்கு புத்தர், உன்னால் மற்றவர்களைக் காயப்படுத்தவும் அழிக்கவும் முடியும் என்பதால் நீ வலிமையானவன் என்று நினைக்கிற நீதான் பைத்தியக்காரன். அது குழந்தைகளின் வேலை. ஆனால் வலிமையானவர்கள், எவ்வாறு உருவாக்க வேண்டும், எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள் என்றார்.

மறைந்த அருள்தந்தை அந்தோணி டி மெல்லோ சொல்வார்- செம்மறி ஆட்டுக் கிடாவினால் ஒரு சுவரை முட்டித் தகர்க்கத்தான் முடியும். ஆனால் உடைந்த இடத்தை அதனால் கட்டியெழுப்ப முடியாது என்று. வானொலி அன்பனே, தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். தெய்வ பயம் அற்றவர்கள் இந்த அங்குலிமால் போல்தான் நினைக்கிறார்கள். ஆனால் எஙகும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த இறைவன் நமது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்பவர்களே வலிமையானவர்கள். எனவே நாம் ஒவ்வொரு சொல்லைச் சொல்வதற்கு முன்னும், செயலைச் செய்வதற்கு முன்னும் இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு கணம் சிந்தித்து செயல்படுவோமா! இறைமையில் வாழ்வோமா!








All the contents on this site are copyrighted ©.