2009-09-05 16:10:09

ஞாயிறு சிந்தனை


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு வாசகங்கள்

எசாயா 35, 4 - 7

4 உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.5 அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.6 அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 2, 1 - 5

1 என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.2 பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.3 அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, தயவுசெய்து இங்கே அமருங்கள் என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, அங்கே போய் நில் என்றோ அல்லது என் கால்பக்கம் தரையில் உட்கார் என்றோ சொல்கிறீர்கள்.4 இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?5 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?

மாற்கு நற்செய்தி 7, 31 - 37

31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.



இறை ஏசுவிலும் அன்னை மரியாவிலும் என் அன்பு சகோதர சகோதரிகளே, நலன்களைப் பெற்றுத்தரும் ஆரோக்ய அன்னையின் பெருவிழாவை எதிர்நோக்கி ஆயிரமாயிரம் பக்தர்கள் வேளை நகருக்கும் ஆரோக்ய அன்னையின் பல திருத்தலங்களுக்கும்  செல்லும் வேளை இது. ஆரோக்ய அன்னையின்  விழாவுக்கு   முந்திய  ஞாயிறன்று  இடம் பெரும்  வாசகங்கள்  ஆரோக்யத்தைப் பற்றி  நம்மைச்  சிந்திக்க அழைக்கின்றன.

நோய், பிணி, துன்பம், வறுமை  போன்ற வாழ்வின் தவிர்க்க முடியாத  யதார்த்தங்களைப்  பற்றி சிந்திக்க முயல்வோம்.  நோய், பிணி, துன்பம், வறுமை இவற்றில் நாம் வாடும் போது நம் மனதில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப் சந்திக்கும் போது நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம்?

நோய், பிணி, துன்பம், வறுமை இவற்றைப் பற்றி இஸ்ராயலர்கள் ரொம்பத் தெளிவா இருந்தாங்க. இவைகளெல்லாம் பாவத்தின் தண்டனைகள். நோயாளிகள், ஏழைகள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அதிலும் ஒரு சில நோய் உடையவர்களைப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் நிழல் கூட தம்மை தீண்டினாலோ, தாங்களும் தீட்டுப் பட்டவர்கள் ஆகிவிடுவோம் என்ற பயம். நாம் வாழும் இந்திய சமூகத்தில் இன்னும் இது போன்ற எண்ணங்கள் சாதிய அடிப்படையில் இருப்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. இந்த பயத்தால் நோயாளிகள், அதிலும் முக்கியமாக, தொழுநோயாளிகள், இரத்த கசிவு நோய் உள்ளவர்கள் இஸ்ராயேல் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். நோயாளி அல்லது ஏழை என்றவுடன்  தீர்ப்புகள் எழுதப்பட்டன. இவன் செய்த குற்றம் அல்லது இவன் பெற்றோர் செய்த குற்றம் என கணக்குகள் எழுந்தன.

துன்பம் ஏன்? அதிலும் மாசற்றவர் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகள் மனித சமுகத்தை எப்போதும் தாக்கி வரும் கேள்விகள். இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு மாபெரும் காவியம் நமது விவிலியத்தில் இடம் பெரும் யோபு ஆகமம். இன்று அதைப் பற்றி அதிகம் பேச முடியாது. யோபுவின் வாழ்வில் நடந்தவைகள் நம்மில் பலருக்கு நடந்திருக்கலாம். செல்வம், உடல் நலம் இழந்து நாம் இருந்த போது அல்லது இன்னும் அந்த சூழ்நிலையில் நாம் தவிக்கும் போது ஆழமான கேள்விகள் மனதை தாக்குகின்றன.

இந்த கேள்விகளுக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன.

முதல் வாசகத்தில் நாம் கேட்கும் எசயாவின் வார்த்தைகள் வேதனையில் இருக்கும் ஒரு உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள். அனால் வெறும் வேதனை மட்டும் அங்கு இல்லை. அந்த ஆழமான வேதனையிலும் இறைவனிடம் விசுவாசம் கொண்ட ஒரு உள்ளத்திலிருந்து வெடித்து கிளம்பும் வார்த்தைகள்.

எல்லாம் அழிந்துவிட்டது என்று விரக்தியின் எல்லைக்கு போகும்போது, மனம் பாறையாய் இறுகிப் போகும். அந்த பாறைக்குள்ளிருந்து சின்னதாய்க் கிளம்பும் ஒரு நீர் கசிவு போன்ற விசுவாசம், கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, பின்னர் பாறையைப் பிளந்து கொட்டும் அருவியாய் மாறும்.

புல்லைப் பற்றிய ஒரு ஆங்கில கவிதை.. எனக்கு ரொம்ப பிடித்த கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும் போது திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம். "தைரியம்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்கிறான். அண்ணன் தனக்குத் தெரிஞ்ச மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்கு தெரிந்த மிருகங்களை வைத்து தைரியத்தை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு பாதி விளங்கியது. அப்போது அவர்கள் போய்க்கொண்டிருந்த பாதையில் யாரோ ஒருவர் புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்து போன புல்தரையின் நடுவில் ஒரு சின்னப் புல் மட்டும் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான். கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்த காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்து போன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல் நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பது தான் தைரியம், என்னைப் பொறுத்தவரை அது விசுவாசம். இந்த விசுவாசத்தை இறுக பற்றிக்கொண்டு எசாயா கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆணித்தரமாய் பதிய வேண்டும்.

எசாயா 35, 4-7. உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார். அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும். எசாயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்கும் போது இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழும். அழகான கற்பனை. நடக்கவே நடக்காது, முடியவே முடியாது அன்று மூடப்பட்ட வாழ்கையை, மூடப்பட்ட கல்லறையைத் திறந்து, எழுந்து வரும் விசுவாச வார்த்தைகள் இவை. ஜோ டேரியோன் (Joe Darion) எழுதிய "The Impossible Dream" என்ற பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த பாடலில் இரு வரிகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

To dream the impossible dream, To be willing to march into Hell

For a heavenly cause

இந்த வரிகளை மொழிபெயர்ப்பு செய்வதை விட இதே தொனியில் கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளை இங்கே நினைத்துப் பார்க்கிறேன். "அசையும் கொடிகள் உயரும், உயரும் நிலவின் முதுகை உரசும்." என்ற இந்த வரிகளும் நடக்க முடியாததை கூறும்  வரிகள். துன்பத்தின் பிடியில், விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது நம் மனதிலும் இது போன்ற உணர்வுகள் வர வேண்டும்.  எசாயாவின் விசுவாச வார்த்தைகள் நமதாக இறைவனை வேண்டுவோம்.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் மிகவும் தெளிவான பாடங்களைத் தருகின்றது. ஏழைகளை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்?

பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இறக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான். மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபபட்டு, இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகளை மதிக்கிறோம்? இதுதான் யாக்கோபு மடலில் எழுப்பப்படும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர் கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பி வந்த யூதர்கள் மத்தியில் இயேசு "வறியோர் பேறு பெற்றோர்" என்று மலை உச்சியில் சொன்னார். யூத மதத் தலைவர்களுக்கு இயேசு சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும், தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில் நம்பிக்கை பிறந்திருக்கும்.



இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு ஒரு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை இன்று நமக்கும்  விடுக்கிறார்.

இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், யூத சமூகத்திற்கும், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும்.

யேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக யேசுவிடம் வரவில்லை. தன் குறைகளைப் பார்த்து தன்னை ஒரு குற்றவாளி  என்றும் கடவுளின் தண்டனையை அனுபவிப்பவன் என்றும் முத்திரை குத்திய யூத சமுதாயத்தின் மேல் அவன் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். ஏசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவன் அவன். அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யேசுவிடம் அவனை கொண்டு வந்தனர். முடக்கு வாதத்தில் கட்டிலிலேயே முடங்கிப் போன ஒருவனை அவன் நண்பர்கள் யேசுவிடம் கொணர்ந்ததை இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து அவனுடைய நண்பர்கள் இதைச் செய்தனர்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இன்றும் நாம் சந்தித்து வருகிறோம். நான் கல்லூரியில் பணியாற்றிய போது, தினம், தினம் ஒரு அற்புதத்தைப் பார்த்தவன். போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஒரு இளைஞனை அவனது நண்பன் தினமும் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வருவான். அவன் பாடம் பயின்ற கட்டிடத்தில் லிப்ட் வசதி இல்லாததால், இந்த நண்பன் அவனைக் குழந்தையைப் போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு இரண்டு மாடிகள் ஏறுவான். ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

யேசுவிடம் அவன் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்ததும் இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. “இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”

இயேசுவின் செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது இதுதான்: "உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."

 இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசு நம்மை கட்டவிழ்ததால், நல்லவைகளைப் பார், நல்லவைகளைப் பேசு, நல்லவைகளைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்வோம்.

சிறப்பாக வறுமை, பிணி இவற்றில் நாம் சிக்கியிருக்கும் போதும், இந்தச் சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும் போதும், எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நமதாக்குவோம். இல்லாதது, முடியாதது என்று ஒன்றும் நம்மை சிறைப் படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவன் துணையோடு, நம்பிக்கையோடு வாழ்ந்தால், பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.6 காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இறை மகனும், ஆரோக்ய அன்னையும் நமக்கு துணை இருப்பார்களாக.







All the contents on this site are copyrighted ©.