2009-09-02 16:10:41

இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய மனக்குறைகளை ஜெர்மனியும் போலந்தும் ஏற்க வேண்டும், ஜெர்மன் கர்தினால்


செப்.02,2009. இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டதில் எல்லாவற்றையும் இழந்த இலட்சக்கணக்கான மக்களின் மனக்குறைகளை ஜெர்மனியும் போலந்தும் ஏற்க வேண்டும் என்று ஒரு ஜெர்மன் கர்தினால் கூறினார்.

அம்மக்களின் துயரங்களை ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகள் அங்கீகரிக்காத வரை ஜெர்மனி, தனது அண்டை நாடான போலந்துடன் முழுமையான ஒப்புரவுடன் வாழ முடியாது என்று பெர்லின் கர்தினால் ஜார்ஜ் ஸ்டெர்ஜின்ஸ்கி கூறினார்.

1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, நாத்சி ஜெர்மன், போலந்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. அதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு காய் என்ற போலந்து கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பெர்லின் கர்தினால் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்த நினைவு தினத்தில் ஜெர்மனி மற்றும் போலந்து ஆயர்கள் பெர்லினில் திருப்பலி நிகழ்த்தி இவ்விரு நாடுகளும் ஒன்றையொன்று மன்னித்து ஒப்புரவுடன் வாழுமாறு அழைப்பு விடுத்தனர்.

மனித குலத்தின் மிகப்பெரிய அழிவுக்கு காரணமான இரண்டாம் உலகப் போரில் உலகெங்குமிருந்து ஏறத்தாழ பத்துக்கோடி படை வீரர்கள் சண்டையிட்டனர். இதில் ஐந்து முதல் ஏழு கோடிப் பேர் வரைக் கொல்லப்பட்டனர்.

இதில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதிலும் அதிகத் தொகையினர் சோவியத் யூனியனில் இறந்தனர். இப்போருக்குப் பினனர் பரவிய தொற்று நோய்களும், பட்டினியும் பலரின் உயிர்களைக் காவு கொண்டுவிட்டன என்று செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.