2009-09-02 10:11:55

அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை


யோவான் 6, 5-13.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இந்தப் புதுமையை நான்கு நற்செய்திகளும் எடுத்துரைக்கின்றன. இயேசுவின் சீடர்களிடையே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய புதுமை இது.

C.L.Moody என்பவரது வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவம் இந்தப் புதுமையைப் புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். C.L.Moody ஒரு அனாதை இல்லம் நடத்தி வந்தார். மிகுந்த கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். ஒரு நாள் அவரது இல்லத்தில் குழந்தைகள் சாப்பிட இரவுணவு ஒன்றும் இல்லை. குளிர் காலம் பனி பெய்து கொண்டிருந்தது. C.L.Moody செய்வதறியாது திகைத்து நின்றார். எதோ மனதில் தோன்றவே, தான் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு, முழந்தாள் படியிட்டு செபிக்கத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. யாரோ ஒருவர் அனாதை இல்லத்தின் நுழைவாயில் மணியை அடித்தார். C.L.Moody சென்று கதவைத் திறந்தபோது, முன் பின் தெரியாத ஒரு நபர் கதவருகே நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.

அவர் ஒரு ரோட்டிக் கடையின் முதலாளி. பக்கத்து ஊருக்கு ரொட்டி கொடுப்பதற்கு சென்று கொண்டிருந்தார். அனாதை இல்லத்தின் முன் வேன் நின்று விட்டது. என்ன முயன்றும் அவரால் வேனை மீண்டும் ஓட்டிச் செல்ல முடியவில்லை. பனி வேறு அதிகமாகி விட்டது. எனவே அந்த கடை முதலாளி வேனில் கொண்டுவந்த ரொட்டிகள் அனைத்தையும் அந்த அனாதை இல்லத்திற்கு வழங்கினார்.

இக்கட்டான சூழ்நிலைகளில், எதிர்பாராத இடங்களில் இருந்து புதுமைகள் நிகழத்தான் செய்கின்றன. யோவான் நற்செய்தியிலும் அப்படி ஒரு சூழ்நிலை தான். இந்த பாலை நிலத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது என்று கவலையில், கலக்கத்தில் இருந்த சீடர்களின் கேள்விகளுக்கு இறைமகன் இயேசு உணவளித்து விடை அளித்தார். ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் ஆசீர்... ஐந்தாயிரம் பேர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது. இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச் செய்தது ஒரு புதுமைதான். இது ஒரு கண்ணோட்டம்.

மற்றொரு கண்ணோட்டம் - ஒரு சில விவிலிய அராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து.

யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவுக்கு அதிகம் கஷ்டப்பட்ட ஒரு குலம். எனவே, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்து செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்த போது, அவர்கள் உணவு கொண்டு வந்திருந்தார்கள். மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவு பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால் பகிர வேண்டுமே!

இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்கு பகிர முடியும்? இந்த கேள்விகளில் அவர்கள் முழ்கி இருநதார்கள். இயேசுவின் சீடர்களுக்கும் இதே சிந்தனை. யார் ஆரம்பிப்பது? அப்போது அந்த புதுமை நிகழ்ந்தது. ஒரு சிறுவன் தான் கொண்டு வந்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் யேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். ஆரம்பமானது ஒரு அற்புத விருந்து.

ரயில் பயணங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும் பொழுது, உணவு நேரம் வந்ததும், ஒரு சின்ன தயக்கம். எல்லாரிடமும் உணவு இருந்தாலும், யார் முதலில் உணவு பொட்டலத்தை பிரிப்பது என்ற சின்ன தயக்கம். ஒருவர் ஆரம்பித்ததும் மற்றவர்களும் அரம்பிபார்கள். இதில் சில சமயங்களில் இன்னும் என்ன அழகு என்றால், ஒருவர் தன் உணவில் கொஞ்சம் மற்றவரோடு பகிர ஆரம்பித்ததும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வர். அவரவர் கொண்டு வந்திருந்த உணவை விட, இன்னும் அதிக ருசியான பல்சுவை விருந்து அங்கு நடக்கும்.

இதே போன்றதொரு அனுபவம் அன்று யேசுவைச் சுற்றி அன்று நடந்திருக்கலாம். ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த மகிழ்விலேயே அங்கு இருந்தவர்களுக்கு பாதி வயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவே தான் அவர்கள் உண்டது போக மீதி 12 கூடைகளில் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்த புதுமை அதிகம் தேவைப் படுகிறது. இத்தனை வளங்களும் நவீன வசதிகளும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் ஆயிரமாயிரம் மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள். அண்மையில் கிடைத்த ஒரு புள்ளி விவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவை அற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 680 கோடி. உலகில் தினம் தினம் உற்ப்பதியாகும் உணவு 720 கோடி மக்கள் உண்பதற்கு தேவையான அளவு உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 130 கோடிக்கும் மேலாக மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். 30 லட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பசி பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.

இந்த தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்க வேண்டும். இயேசு இன்று நம்மிடையே வந்தால் உணவை இன்னும் பலுக செய்வதைவிட இருக்கும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் புதுமையைச் செய்வார்.

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. உலகத்தை வாழ வைக்க, வளப்படுத்த பகிர்ந்துண்ணும் மனதை நமக்கு தர வேண்டும் என இறைமகனிடம் வேண்டுவோம்.

முன்னேற்றத்தின் பெயரால் உலகத்தையும் இயற்கையையும் அழிப்பதை நிறுத்திவிட்டு, உலகை வளப்படுத்தும் அறிவை, மனதை தரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.