2009-09-01 16:58:50

கிறிஸ்தவர்கள், கண்ணீர் மற்றும் துன்பங்கள் வழியாக புன்முறுவல் காட்ட முடியும், கொழும்பு பேராயர்


செப்.01,2009 கிறிஸ்தவர்கள், கண்ணீர் மற்றும் துன்பங்கள் வழியாக புன்முறுவல் காட்ட முடியும் என்று ஆயிரக்கணக்கான திருப்பயணிகளிடம் கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித் கூறினார்.

தெவாட்டா இலங்கை மாதா தேசிய திருத்தலத்தில் நோயாளிகளை ஆசீர்வதிக்கும் திருவழிபாட்டில் கூடியிருந்த பக்தர்களுக்கு உரையாற்றிய பேராயர் ரஞ்சித், இலங்கையில் 1970 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்று வந்த இரத்தம் சிந்துதலையும் ஆயுதத் தாக்குதலையும் இல்லாமல் ஆக்குவதற்கு கிறிஸ்தவர்கள் அகத்தூய்மையுடனும் நீதியுடனும் வாழுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏறத்தாழ ஆயிரம் நோயாளிகள் ஆசீர்வதிக்கப்பட்ட இத்திருவழிபாட்டில், கொழும்புவின் முன்னாள் பேராயர்கள் நிக்கோலாஸ் மார்குஸ், ஆஸ்வால்டு கோமிஸ், யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் உட்பட சுமார் 200 அருட்பணியாளர்களும் 150 இருபால் துறவியரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, இலங்கையில், தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் பற்றி விமர்சித்து கட்டுரைகள் எழுதிய குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இருபது வருட கடின வேலை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.