2009-08-31 13:17:41

புவியின் நண்பர்கள்


ஆக.31,2009. இன்று இணையதளத்தில் தமிழ் தினத்தாள் ஒன்றை திறந்தவுடன் “பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்” என்ற செய்தியைப் பார்த்தோம். பிளாஸ்டிக் சாலையா அது எப்படி? என்ற ஆவலில் அதை வாசித்தோம். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் என்பவர், மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமி வெப்பமடைவதை தடுக்கவும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாகக் கிடைத்ததே பிளாஸ்டிக் ரோடு என அறிந்தோம். பேராசிரியர் வாசுதேவன், கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்திருக்கிறார். உலகில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் போடப்பட்டது. கிராம வளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக் ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது. பேராசிரியர் வாசுதேவனின் அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம் அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது. உலகில் இக்காலத்திய சாதனையாளர் பட்டியலில் தமிழர்கள் புகழ் ஓங்கி வருகிறது. நமக்குத் தெரிந்து அப்துல்கலாம், அண்ணைமலை மயில்சாமி, இவர்களுக்குப் பின்னர் இப்பொழுது வாசுதேவன். பேராசிரியர் வாசுதேவன் அவர்களுக்கு முதலில் நமது பாராட்டைச் சமர்ப்பிப்போம்.

அன்பர்களே, சுற்றுச்சூழ்ல் மாசடைந்திருக்கும் இக்காலத்தில் இத்தகைய புதிய கண்டுபிடிப்புக்கள் காலத்தின் கட்டாயமாகின்றன. இந்த ஆகஸ்டில் உரோமையில் கடந்த ஆண்டைவிட தற்சமயம் அதிக வெயில். இங்கு மட்டுமல்ல உலகெங்கும் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை மாறி வருகிறது. இந்த மாற்றத்தால் வருகின்ற காலங்களி்ல் வானிலை அறிவிப்பு அவ்வளவு துல்லியமாக இருக்காது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக வானிலை ஆய்வு நிறுவனத் தலைவர் மைக்கிள் ஜராவ்டு ஐ.நா.வானொலியில் கடந்த வாரத்தில் அறிவித்திருக்கிறார். தொழிற்சாலை, வாகனப்புகை உட்பட பல்வேறு மாசுக்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனல் காற்று வீசுவதும், புயல், சூறாவளித் தாக்குதல், காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளன. வெப்பமயத்தால் ஏற்படும் பின் விளைவுகளால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 3 இலட்சம் பேர் இறப்பதாகவும் ஆண்டுக்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அது ஆண்டுக்கு 5 இலட்சமாக உயரும். இம்மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 18 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி வெப்பமடைந்து வருவதால் வருங்காலத் தலைமுறைகள் எதிர் நோக்கவுள்ள பேராபத்தைக் கண்முன்கொண்டு ஐ.நா. நிறுவனமும் மாசுகட்டுப்பாட்டு மாநாடுகளை நடத்தி வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுபடுத்தும் ஒப்பந்த்ததில் கையெழுத்திட நாடுகளைக் குறிப்பாக தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது. ஜப்பானின் கியோட்டோவில் 2005ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை 183 நாடுகள் அமல்படுத்தியிருக்கின்றன என்று கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கெடு 2012ம் ஆண்டில் நிறைவுறவுள்ள வேளை, ஐ.நா.நிறுவனம் வருகிற டிசம்பர் 7 முதல் 18 வரை கோப்பென்ஹாகனில் மற்றுமொரு உலக வெப்பநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இது நடைபெறுவதற்கு நூறு நாட்களே இருக்கும்வேளை, இந்த செப்டம்பர் 21 முதல் 25 வரை முதல் உலக வெப்பநிலை வாரம் ஒன்றை பன்னாட்டு நிறுவனம் நடத்தவுள்ளது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்கவிருக்கின்றன. கோப்பென்ஹாகன் மாநாட்டில் உலக அரசுகளிடம் சமர்பிப்பதற்கென இந்த வாரத்தில் பொது மக்களிடம் கையெழுத்து வேட்டையும் இடம் பெறவுள்ளது. இந்த கோப்பென்ஹாகன் மாநாடு பற்றிக் கருத்து தெரிவித்த ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் ஆக்கிம் ஸ்டெய்னர், 600 கோடியாகவுள்ள தற்போதைய மக்கட்தொகை, 2050ம் ஆண்டில் 900 கோடிக்கு அதிகமாக உயரவுள்ள வேளை, கோப்பென்ஹாகன் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிகவும் இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.

ஐ.நா.வின் இந்நடவடிக்கைகளைக் கண்முன் கொண்டு கத்தோலிக்கம் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் பூமி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டன் தலத்திருச்சபை வருகிற அக்டோபர் நான்காம் தேதி இதற்காகச் செபிக்கவிருக்கிறது. ஹாங்காங் தலத் திருச்சபையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு, வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நான்கு மாத செப நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் கடந்த வாரப் புதன் மறைபோதகத்தில், இப்பூமி, உண்மையில் படைத்தவரின் விலைமதிப்பில்லா கொடை, அதன் நியதிகளை வகுத்த அவர், அவற்றின் பாதிகாவலர்களாகவும் நம்மை ஏற்படுத்தினார். இன்று உடனடித் தேவையாக இருக்கும் உலக வெப்பநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்கு விரைவில் ஐ.நா.வில் கூடவிருக்கின்ற அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்தச் சுற்றுச்சூழல் விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்றால் திருத்தந்தை மீண்டும் இஞ்ஞாயிறு மூவேளை உரையில் அது பற்றிக் கூறினார். இத்தாலியில், இச்செவ்வாயன்று படைப்பைப் பாதுகாக்கும் தினம் கடைபிடிக்கப்படுகின்றது, கடவுளின் கொடையாகிய படைப்பைப் பாதுகாப்பதற்கு மிகுதியாகத் தங்களை அர்ப்பணிக்குமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார். அத்துடன், இந்த வெப்பநிலை மாற்றத்திற்கு மிக ஏழை நாடுகள் பலிகடா ஆகிவிடாதிருக்க தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் இப்பூமி பந்தின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களில் பொறுப்புடன்கூடிய ஒத்துழைப்பை நல்கவும் கேட்டுக் கொண்டார்.

இக்காலத்தில் இடம் பெறும் பயங்கரவாத மோதல்களின் பாதிப்புக்களைவிடக் கொடூரமானதாக சுற்றுச்சூழல் மாசடைந்து கொண்டிருக்கின்றது. நமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். எனவே வருங்காலத் தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கல்வி மிகவும் இன்றியமையாதது. இளையோர் இயற்கையைப் போற்றக் கற்றுக்கொள்ளாதவரை எந்த முன்னேற்றமும் நீடித்து நிற்காது என்று சொல்கிறார்கள். வருங்காலத் தூண்களான மாணவர்களின் கையில்தான் சுற்றுச்சூழலைக் காக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் இருக்கிறது. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும் ஏறத்தாழ 800 இளையோரை கொரியக் குடியரசின் தெஜோனில் ஒன்று திரட்டி வெப்பநிலை மாற்றம் குறித்த முதல் சர்வதேச இளையோர் மாநாட்டை கடந்த வாரத்தில் நடத்தியது. உலகில் நூறு நகரங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த இளையோர் பேரணிகளையும் இவ்வாண்டில் நடத்துவதற்கு ஐ.நா. திட்டமிட்டுள்ளது. இந்தியத் திருச்சபையும் மாணவர்களிடம் மரம் நடும் பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு மதிப்பெண்களும் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றது.

அன்பு வானொலி நண்பர்களே, இப்பூமி சூடாகி வருகிறது, காற்று கசங்கிவிட்டது, பாலாறு கோளாறி விட்டது, நிலத்தடி நீர் தீர்ந்து விட்டது, தண்ணீர் முன்பு போல் சுவையாக இல்லை என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் அதற்கான காரணங்கள் தெரிந்தும் அவற்றை நிவர்த்திக்க என்ன செய்கிறோம்? செயற்கையையே நம்பி நமக்கு நாமே கேடு வருவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒருசமயம் இலண்டனிலிருந்து டெல்லியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது அந்த அதிநவீன விமானம். கடல் மேல் இரவில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒலிபெருக்கி அலறியது. எலெக்ட்ரானிக் தொலைத் தொடர்பு படித்தவர்கள் யாராவது இருந்தால் விமான ஓட்டி அறைக்கு உடனடியாகச் செல்லுங்கள் என்றது. யாரும் போவதாகத் தெரியவில்லை. உடனேஒரு கிராமத்துப் பெரியவர் எழுந்து அங்கு சென்று என்ன பிரச்சனை என்றார். விமான ஓட்டிக்கு கோபம். ஒன்றும் படிக்காத நீர் எப்படி இதற்கு உதவ முடியும் என்றார். எனினும் கிராமத்தவர் விடாமல் கேட்டதால் அவர் சொன்னார் - இங்குள்ள திசை காட்டும் கருவி இயங்கவில்லை. டெல்லி எந்தத் திசையில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று. பூ... இவ்வளவுதானா. கோள்கள் மற்றும் நடசத்திரங்களின் இயக்கம் பற்றி என் தாத்தா எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று கூறித் தெளிவாய்த் திசை காட்டினார். விமானம் பத்திரமாக டெல்லி சேர்ந்தது.

செயற்கையையே நம்பி வெகு நாட்கள் வாழ முடியாது. ஒருநாள் இயற்கையிடம் சரணடையத்தான் வேண்டும். இந்த அண்டவெளி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மனிதனின் தீய, கெட்ட செயல்களைத் தாங்கும். மனிதனின் இப்போதைய அழிவுச் செயல்களை அது தாங்கவில்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். எனவே மனிதன் இயற்கையின் நண்பனாகி அதனை மதித்து அதனோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே இப்புவி காப்பாற்றப்படும். ஆதலால் இப்புவியின் நண்பர்களாவோம். அப்போது அது மாசுபடாதிருக்கும், உடல், உள்ள ஆரோக்யத்தையும் இப்புவியினர் அனுபவிக்க இயலும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது வெறும் திண்ணைப் பேச்சு இல்லை. அது அறிவியல் பூர்வமான உண்மை.








All the contents on this site are copyrighted ©.