2009-08-29 15:04:53

கத்தோலிக்கத் திருச்சபையுடன் ஒத்துழைப்பைக் காத்து வளர்ப்பது மிகவும் முக்கியமானது, உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் புதிய தலைவர்


ஆக.29,2009. கத்தோலிக்கத் திருச்சபையுடன் ஒத்துழைப்பைக் காத்து வளர்ப்பது மிகவும் முக்கியமானது என்று தான் நம்புவதாக உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் புதிய தலைவர் ஒலாவ் பைக்செ த்வெயிட் கூறினார்.

உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் ஏழாவது புதிய பொதுச் செயலராக இவ்வியாழனன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 வயதாகும் பாஸ்டர் த்வெயிட், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, இறையியல் பணிக்கும் மற்றும் பல சமூக நன்னெறி சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கும் வழங்கியுள்ளவை மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை உலகளாவிய திருச்சபை, உலக கிறிஸ்தவ சபைகள் அவை உலகளாவிய நிறுவனம், இந்நிலை பல அனுபவ பரிமாற்றங்களுக்குப் பாதை அமைக்கின்றது என்றும் அவர் கூறினார்.

உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நார்வே லூத்தரன் சபையைச் சேர்ந்த த்வெயிட், 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பொறுப்பேற்பார். இவ்வவையில் 110க்கும் மேற்பட்ட நாடுகளின் 340க்கும் அதிகமான பிரிந்த கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இதில் அங்கத்தினர் இல்லை. எனினும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் வளர்பபதற்கு வத்திக்கான் மற்றும் உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் குழு ஒன்று கடந்த 40 வருடங்களாக உழைத்து வருகிறது.

 








All the contents on this site are copyrighted ©.