2009-08-29 15:04:05

இராக்கில் தேசிய அளவில் உரையாடலும் ஒப்புரவும் இடம் பெற கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் அழைப்பு


ஆக.29,2009. இராக்கில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தேசிய அளவில் உரையாடலும் ஒப்புரவும் இடம் பெறுமாறு அந்நாட்டின் கிர்குக் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் உருக்கமாக அழைப்புவிடுத்தனர்.

ரம்ஜான் புனித மாதம் தொடங்கியுள்ளதையொட்டி கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ அழைப்பின் பேரில் அந்நகர் பேராலயத்தில் கூடிய, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களின் ஐம்பது பிரதிநிதிகள் இவ்வழைப்பை முன்வைத்தனர்.

இந்தக் கூட்டமானது, நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கின்றது, நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள், நாம் அனைவரும் சகோதரர்கள் என்றுரைத்த பேராயர் சாக்கோ, மக்களின் நன்மை மற்றும் நாட்டின் நலனுக்காக நாம் ஒருவர் ஒருவரை மதித்து ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இராக்கிற்கு ஒப்புரவும் உரையாடலும் தேவை என்றும் பேராயர் கூறினார்.

செபம், மன்னிப்பு மற்றும் ஒப்புரவுக்கான உறுதியான காலமாக இருக்கும் இந்தப் புனித ரம்ஜான் மாதத்தில் நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு நமது இனிய மற்றும் உண்மையான வாழ்த்தைத் தெரிவிப்போம் என்றும் கிர்குக் பேராயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.