2009-08-28 20:38:25

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதன் ஓராண்டு நினைவு 280809 .


ஒரிசாவில் இந்தியக் கிறிஸ்தவர்களைத் தீவிர வாத இயக்கங்கள் தாக்கியதன் ஓராண்டு நினைவு நாளில் தமிழகத்தின் மதுரையில் பல்சமயக்கூட்டம் நடத்தப்பட்டது .

மதுரை அரசரடி ஆயர் அருள்தாஸ் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல மதங்களின் ஒற்றுமை கூட்டமும் ,சென்ற ஆண்டு காந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக மெழுகுதிரி ஏற்றப்பட்டு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது . கூட்டத்திற்கு தமிழ் நாடு இறையியல் கல்லூரி முதல்வர் அருள்திரு முனைவர் ஞானவரம் தலைமை தாங்கினார் . அங்கு முக்கிய உரை நிகழ்த்திய மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியின் தலைவர் இயேசுசபைத் தந்தை ஜெபமாலை ராஜா , வன்முறைகளின் வரலாற்றுப் பின்னணியையும் , பாதிக்கப்பட்டவர்களின் நிலையையும் , இனி ஆற்றவேண்டிய செயல்முறைத் திட்டங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார் . டெல்லியில் இருந்து இந்திய இயேசுசபையின் எல்லாப் பணிகளுக்கும் ஊக்கமளித்துவரும் அகிலஇந்திய இயேசுசபைத் தலைவர் தந்தை எட்வர்டு முடவசேரி ஒரிசாவில் நடந்தவை பற்றிய தேசிய அளவிலான கண்ணோட்டத்தையும் , மத்திய செய்ய வேண்டிய துயர் தீர்ப்புப் பணிகள் பற்றியும் , சமாதானத்தை நிலை நாட்ட எடுக்கவேண்டிய முயற்சிகள் பற்றியும் தெளிவுற விளக்கினார். வரலாற்றுப் பின்னணியில் நடந்து வரும் தீவிரவாத இயக்கங்களின் கிறிஸ்தவர்களை வெறுத்துத் தாக்கிவரும் போக்கை சட்டவல்லுநர் இயேசுசபைத் தந்தை சேவியர் ஆரோக்கியசாமி தெளிவுற விளக்கினார் . கூட்டத்தில் சிறப்புரை வழங்கிய தலைவர் ஞானவரம் நீதிவழங்கப்படுதல் , பாதுகாப்பு வழங்குதல் , மத்திய புலனாய்வுத் துறையின் ஆய்வு , பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு சீரமைப்பு , அவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் சரியீடு்ம் தருதல் மற்றும் தேசிய சிறுபான்மைக் கழகத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துதல் போன்ற கருத்துக்களை விளக்கிப்பேசினார் . கூட்டமுடிவில் முனைவர் துரைராஜ் நன்றி வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.