2009-08-26 16:13:51

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஆக.19,2009 தனது கோடை விடுமுறை காலத்தை பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தெல் கண்டோல்போவில் செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் காலை அங்கேயே திருப்பயணிகளைச் சந்தித்து புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.

இயற்கை எனும் விலைமதிப்பற்ற கொடைக்கென இறைவனுக்கென நன்றி சொல்வதற்கான நல்லதொரு வாய்ப்பை கோடை விடுமுறை காலம் நம் அனைவரும் வழங்கியுள்ளது. இக்கருத்தை மையமாகக் கொண்டு இன்று படைப்பின் பாதுகாவலர்களாக நோக்கப்படும் நமக்கும் படைப்பாளியான இறைவனுக்கும் இடையேயான உறவு குறித்து சிந்திக்க ஆவல் கொள்கிறேன். இத்தகைய ஒரு சூழலில் உலக தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஐ.நா.அவையில் விரைவில்கூடி விவாதிக்கவுள்ள அரசுகளின் தலைவர்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் எனது ஆதரவைத் தெரிவிக்கவும் ஆவல் கொள்கிறேன். இவ்வுலகம் என்பது இறைவனின் விலைமதிக்க முடியாத கொடை. இதன் அமைப்பு முறைகளைத் திட்டமிட்டு நமக்களித்த இறைவன் அதனைப் பராமரிக்கும் பொறுப்புக்கான வழிகாட்டுதல் முறைகளையும் தந்துள்ளான். இத்தகைய ஓர் அமைப்புமுறை பின்னணியைக் காணும் திருச்சபை சுற்றுச்சூழலும் அதன் பாதுகாப்பும் மனிதகுலத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சியோடு தொடர்புடையவை என்பதாக நோக்குகிறது. எனது அண்மை சுற்றுமடலான காரித்தாஸ் இன் வெரித்தாத்தேயில் இத்தகைய கேள்விகள் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஒருமைப்பாட்டுணர்வுக்கான ஒழுக்கரீதி தேவைக்கு அழைப்பு விடுக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த ஒருமைப்பாட்டுணர்வு என்பது நாடுகளுக்கிடையே மட்டுமல்ல, தனியார்களிடையே இடம் பெற வேண்டும். ஏனெனில் இயற்கைச் சுற்றுச்சூழல் என்பது அனைவருக்குமென இறைவனால் வழங்கப்பட்டது. ஆகவே அதனைப் பயன்படுத்துவது என்பது மனிதகுலமனைத்திற்குமான தனிமனிதர்களின் பொறுப்புணர்வுடன் இடம் பெற வேண்டும். இத்தகைய ஒரு நிலையில் சர்வதேச சமுதாயமும் தனிநாடுகளும் சுற்றுச்சூழலைத் தவறாகப் பயன்படுத்தி அதற்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளைத் தடுப்பதற்கென சரியான வழிகாட்டுதல்களைத் தங்கள் குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகச் செலவினங்கள் வெளிப்படையானதாக ஆக்கப்பட்டு யார் அவைகளைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களால் ஏற்கப்படவேண்டுமேயொழிய பிறமக்கள் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தோள்களில் அவைகளைச் சுமத்தக்கூடாது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வளங்களும் தட்பவெப்பநிலைகளும் காக்கப்படுவதும் அனைத்துத் தலைவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையை, சட்டத்திற்கான மதிப்புடன் ஏழை நாடுகளுடனான ஒருமைப்பாட்டு ஊக்குவிப்புடன் எதிர்பார்க்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றிணைந்த மனித முன்னேற்றத்தை அதாவது நிகழ்கால மனிதர்களுக்கும் வருங்காலத் தலைமுறைக்குமென அனைவருக்கும் பலன்தரக்கூடிய உண்மையில் வேரூன்றிய பிறரன்பு மதிப்பீடுகளால் தூண்டப்பட்ட அந்த முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப முடியும். இத்தகைய ஒன்று இடம் பெற வேண்டுமெனில் படைப்பிற்கான நம் பொறுப்புணர்வை மேலும் அதிகமாக ஏற்றுக்கொண்டு பகிர்ந்து செயல்படுத்துவதன் மூலம் இன்றைய உலக வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் புதுஉருவம் பெற வேண்டும். இத்தகைய ஒரு நிலை சுற்றுச்சூழல் கூறுகளால் மட்டும் நம்மிடம் கேட்கப்படவில்லை, மாறாக பசி மற்றும் பிற நோய் துன்பங்களும் இத்தகைய பொறுப்புணர்வுக்கான ஓர் அழைப்பை முன்வைக்கின்றன.

இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.