2009-08-26 15:02:40

அருளாளர் அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு ஓராண்டு கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன


ஆக.26,2009 கல்கத்தா அருளாளர் அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு அச்சபையினர் ஓராண்டு கொண்டாட்டங்களை இன்று தொடங்கினர்.

கல்கத்தாவிலுள்ள அச்சபையின் தலைமையில்ல ஆலயத்தில் இப்புதன்கிழமை திருப்பலி நிகழ்த்திய கல்கத்தா முன்னாள் பேராயர் ஹென்றி டிசூசா, இன்று இந்த நூறாம் ஆண்டு கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் பேசிய அன்னை தெரேசா பிறரன்பு மறைபோதக சபையின் தலைமைச் சகோதரி மேரி பிரேமா, இறைவனின் அன்பையும் சமாதானத்தையும் ஏழைகளுக்கு கொடுப்பதே இந்த நூறாம் ஆண்டில் அன்னை தெரேசாவுக்கு நாம் வழங்கும் சிறந்த கொடையாக இருக்கும் என்றார்.

மக்கள் கடவுளின் அன்பை அனுபவிக்கும் பொழுது அதைப் பலவிதங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள், அனைத்து மக்களையும் அன்பு செய்ததன் மூலம் அருளாளர் அன்னை தெரேசா பலரைக் கவர்ந்துள்ளார் என்றும் உரைத்த அருள்சகோதரி பிரேமா, நமது வீடுகளிலே யாராவது தனிமையாகவும் அன்பு செய்யப்படாமலும், மன்னிப்பை வேண்டியும் இருக்கலாம், எனவே வீடுகளில் முதலில் தொடங்குவதன் வழியாக அன்பின் கருவிகளாக மாற முடியும் என்று கூறினார்.

இந்த நூறாம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி நிறைவு பெறும் என்றும் அவர் அறிவித்தார்.

அன்னை தெரேசா 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தற்போதைய மாசிடோனியாவி்ல் பிறந்தவர்.

 








All the contents on this site are copyrighted ©.