2009-08-24 13:06:41

இக்காலத்தில் கிறிஸ்தவர்களாக வாழ்வது எளிதான காரியம் அல்ல, திருத்தந்தை


ஆக.24,2009. இக்காலத்தில் கிறிஸ்தவர்களாக வாழ்வது எளிதான காரியம் அல்ல, இது, கிறிஸ்துவின் காலத்திலும் எளிதாக இல்லை என்று இஞ்ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவில் பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தின் உள் மற்றும் வெளி வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றும் பொழுது எதிர்படும் இடையூறுகளிலிருந்து நீந்திச் செல்லுமாறு அவர் தம்மைப் பின்செல்லுவோரைக் கேட்கின்றார் என்று கூறினார்.

மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்ற இயேசுவின் உறுதியான இவ்வுரையைக் கேட்டு அவரைப் பின்சென்ற பலர் அவரை விட்டு விலகிச் சென்றதை விளக்கிய இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

எனினும் இயேசு தமது கடினமான போதனைகளை இலகுவாக்கவில்லை, உண்மையில் அவர் தமது பன்னிரண்டு திருத்தூதர்கள் பக்கம் திரும்பி நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார் என்றுரைத்த திருத்தந்தை, பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்வி இயேசுவின் பன்னிரு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்தின் விசுவாசிகளுக்கும் முன்வைக்கப்படுகிறது என்று விளக்கினார்.

இன்றும்கூட கிறிஸ்தவ விசுவாசத்தின் புரிந்து கொள்ள முடியாத மெய்மைகளால் பலர் துர்மாதிரிகை அடைகிறார்கள், இயேசுவின் போதனை கடினமாகத் தோன்றுகிறது, செயல்படுத்துவதற்கு அது மிகவும் கடினமாக இருக்கின்றது என்பது, கிறிஸ்துவைக் கைவிடுபவர்களும் அவரது போதனையைப் புறக்கணிக்கிறவர்களும் சொல்வது, இவர்கள் காலத்தின் அமைப்புகளுக்கு ஏற்ப வார்த்தையை வடிவமைத்து அவற்றின் அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் சிதைப்பவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு தம்மைப் பின்செல்லுவோரின் மேலோட்டமான வாழ்க்கையில் திருப்தி கொள்ளவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவரின் சிந்தனைகளிலும் அவரது திட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார் என்றும் திருத்தந்தை தொடர்ந்து கூறினார்.

இந்த மாதிரியான வாழ்வே நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும், நம் இருப்புக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கும், எனினும் இயேசுவைப் பின்செல்லும் இவ்வாழ்வு இன்னல்களையும் சுயமறுப்புக்களையும் கொண்டு வரும், ஏனெனில் இதில் அடிக்கடி தற்போதைய உலகின் போக்கிற்கு எதிராகச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார் திருத்தந்தை. RealAudioMP3

ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்று இயேசுவிடம் அறிக்கையிட்ட முதல் பாப்பிறையாகிய தூய பேதுருவின் பதிலையும் சுட்டிக்காட்டிய அவர், நமது மனிதப் பலவீனங்களைப் புரிந்து கொள்ளும் அதேவேளை, தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து பேதுரு போல நாமும் இயேசுவிடம் சொல்வோம் என விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்தார்.

விசுவாசம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடை, அதேசமயம் அது மனிதனின் முழுமையான சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ளது, விசுவாசம் என்பது, நம் வாழ்வின் விளக்காகவும் ஒளியாகவும் இருக்கின்ற ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பது என்றும் திருத்தந்தை கூறினார்.

இம்மூவேளை செப உரையைத் தொடங்கு முன்னர் தமது வலது கையில் போடப்பட்டிருந்த மாவுகட்டு அவிழ்க்கப்பட்டதைக் காட்டிப் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இது எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கை இன்னும் சோம்பேறியாகவே இருக்கின்றது என்று சொல்லி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

RealAudioMP3 கடந்த மாதம், தமது படுக்கைக்கு அருகில் இருந்த விளக்கைப் போட முயற்சித்த போது தவறி விழுந்த திருத்தந்தையின் வலது கை மணிக்கட்டில் இலேசான முறிவு ஏற்பட்டது. அதற்காகப் போடப்பட்ட மாவுக்கட்டு தற்சமயம் அகற்றப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.