2009-08-24 14:48:23

அன்புக்கு ஓர் அன்னை!


ஆக.24,2009. "தாயின் இடம், ஞானத்தின் மூலம். தாய்தான் முதல்பார்வை, தாய்தான் முதற்பாசம், தாய்தான் முதல்ஞானம்" என்றெல்லாம் தாயின் அருமையை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு தாயின் இடத்திற்குச் சமமாக இன்னொரு மனித உறவு இருக்க இயலாது. ஆனாலும் பெற்றால்தான் பிள்ளையா? என்றும் கேட்கப்படுகின்றது. இந்த உயிரியல் தாய்க்கு என்றால் பிள்ளைகள் கணக்குக்குள் அடங்கிவிடலாம். ஆனால் பெறாமலே தாயாகுவோருக்கு குழந்தைகள் கணக்கில் அடங்கா. இவர்களை உலகம் வெறுமனே பெயர் சொல்லி அழைப்பதில்லை. அன்னை என்ற சொல்லையும் சேர்த்துத்தான் அழைக்கின்றது. தங்களது அன்பென்ற மழையில் இந்த அகிலத்தையே நனைய வைக்க இவர்களால் எப்படி இயலுகின்றது?

அன்னை என்றவுடன் கல்கத்தா அன்னை தெரேசா வந்து நிறைக்கிறார். ஆம். அன்பர்களே, இந்த அருளாளர் அன்னை தெரேசாவுக்கு வருகிற வியாழனன்று வயது நூறாகிறது. இறவாப் பிறவியாக எல்லாரிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த அன்னை 1910ம் ஆண்டு ஆக்ஸட் 27ம் தேதி தற்போதைய மாசிடோனிய குடியரசில் பிறந்தார். ஆக்னஸ் கோன்ஸ்ஹா போஜாஜூ என்ற இந்தக் குழந்தை பிற்காலத்தில் அன்பின் முகவரியாக விளங்கும் என்பது அப்போது அதன் பெற்றோருக்கே தெரியாது. குழந்தை ஆக்னஸ் வளர்ந்து, பின்னர் வனப்பான வாலிபத்தில் துறவைத் தழுவத் துடித்தது. வாசித்த சில நூல்களின் பயனாக, எப்படியாவது இந்திய மண்ணில் ஏழைகளுக்கு இறைப்பணியாற்ற வேண்டுமென்பதில் குறியாய் இருந்தது. எனவே கல்கத்தாவில் கன்னியர் இல்லத்தை நடத்திய லொரேட்டோ சபையில் அயர்லாந்து நாடு சென்று சேர்ந்தது. கன்னியர்மட ஒழுங்கின்படி தெரேசா என்று தனது பெயரையும் மாற்றியது. 1929ம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி தமது 19வது வயதில் தனது நெடுநாள் கனவு நிலமான கல்கத்தாவிலும் காலடி பதித்தன அருள்சகோதரி தெரேசாவின் பாதங்கள்.

வங்க நிலம் இந்தியாவின் தங்க நிலம் என்பார்கள். "வங்கம், இன்றைக்குச் சிந்தித்தால் இந்தியா நாளைக்குச் சிந்திக்கிறது" என்று சொன்னார் ஜவஹர்லால் நேரு. இந்திய மண்ணுக்கு இணையற்ற இலக்கியவாதிகளையும் அறிஞர் பெருமக்களையும் அவதரித்து கொடுத்த இந்த அற்புத பூமியில் கல்கத்தா மாநகரம், ஏழை எளியவர்கள், அபலைகள், அகதிகள், ஊனமுற்றோர் தொழுநோயாளிகள் என அநாதைகளின் கூடாரமாக கலங்கிக் கிடந்தது. காரணம் இந்தியா சுதந்திரம் பெற்று கிழக்கு வங்காளம் பிரிந்த போது பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் அகதிகளாக, அநாதைகளாக அங்கேயே தேங்கிப் போயினர். 1947ம் ஆண்டில் கல்கத்தாவின் மக்கள்தொகை 80 இலட்சமாகவும் நடைபாதை மக்கள்தொகை மட்டும் ஐந்து இலட்சமாகவும் இருந்ததெனச் சொல்லப்படுகிறது. மக்கள் நெருக்கடியால், தெருவோரங்களிலும் இரயில் நிலையங்களிலும் தரிசு நிலங்களிலும் மக்கள் தங்கள் கூடுகளைக் கட்டத் தொடங்கினர். இதனால் நோயும் நொடிகளும் கூடவே பிறக்க நாளொன்றுக்குக் குறைந்தது பத்து பிணங்களாவது தெருவோரங்களில் தேங்கிக் கிடக்கும், கல்கத்தா வானம் முழுக்க கழுகுகள் பறக்கும். அனுபவம் என்பது ஆன்மாவில் விழுந்த அம்மைத் தழும்பு மாதிரி என்பார்கள். எனவே கல்கத்தாவின் இந்நிலை கண்ட சகோதரி தெரேசா, "சேரிகளுக்குச் செல், சேவைகளைச் செய்" என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார். பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இடத்தை விட்டுவிட்டு 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் 5 ரூபாய் மூலதனத்துடன் சேரிக்குச் சென்றார். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5 அவரின் இறுதி மூச்சுவரை அவரின் மனித மையத் தாயுள்ளப் பணி தொடர்ந்தது.

சேரிகள் நிறைந்த கல்கத்தாவின் வீதிகள், ஆசிரியை அருள்சகோதரி தெரேசாவை அனைவருக்கும் அன்புள்ள அன்னை தெரேசாவாக அடையாளம் காட்டின. "உணர்ச்சிப் பெருக்கே உலகு. உணர்வுகளின் மொத்த உருவமே மனிதன். ஒரு மனிதனின் கண்ணீரைக் கண்டால் சக மனிதனுக்குக் கண்ணீர் வரவேண்டும்" என்பதுதான் இயல்பு, இறைவனின் நியதி. அந்த அன்னையும், "துன்பத்திலும் நோயிலும் துடிப்பவர் எல்லார்க்கும் வந்து துணையானார். அவரைத் தேடி சர்வதேசப் பரிசுகள் வந்த போது ஒரு மேடையில் உரக்கச் சொன்னார்- இந்தப் பரிசை, ஏழைகள், தொழுநோயாளிகள், ஆதரவற்றோர் என அனைவர் பெயராலும் வாங்குகிறேன் என்று.

எல்லாரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள், எல்லாரிலும் இறைவன் இருக்கின்றார் என்பார் அன்னை தெரேசா. தமது சபையின் ஒவ்வொரு இல்லமும் ஒரு திருநற்கருணை பேழை என்பார். நான் தாகமாயிருந்தேன், தண்ணீர் குடித்தீர்கள், நோயுற்றிருந்தேன் கவனித்தீர்கள், பசியாய் இருந்தேன் உண்ணக் கொடுத்தீர்கள் என்ற இயேசுவின் திருவாக்கை அடிக்கடி பொது மேடைகளில் நினைவுபடுத்துவார்.

இறக்கும் மனிதனிடத்தில் இயேசுவைக் கண்டவர் அன்னை தெரேசா. புழு பூச்சிகள் போல குப்பைகளில் இறந்து கிடப்பதைவிட அன்பான அரவணைப்பில், தாய்மைத் தாழ்வாரங்களில் உயிர் போவதே உன்னதமானது என்பதில் அக்கறை கொண்டிருந்தவர். தாய் தந்தையின் அன்பு இல்லாத போது மனநோய் வந்துவிடும். அதோடு நோயும் சேர்ந்துவிட்டால் நிலை எப்படி இருக்கும்? இப்படி அன்புக்காக அழுகின்ற ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை அரவணைத்த அன்னையை அழைக்காத முக்கிய உலக அரங்குகளே கிடையாது. எவர்க்கும் மதிப்பளித்த அன்னை, மனிதனை மதிக்காத எவரையும் தாங்கிக் கொள்ளமாட்டார். மனித உயிர்களுக்கு கருவிலே கல்லறைகள் கட்டப்படுவதையோ, செயற்கையாக அவ்வுயிர்கள் பறிக்கப்படுவதையோ சகித்துக் கொள்ளாதவர். கருக்கலைப்பை வன்மையாய்க் கண்டித்த அன்னை தெரேசா, பெற்ற தாய் பால்குடிக்கும் தனது மகவை மறக்கலாம், ஆனால் இறைவன் தம் குழந்தைகளைத் தம் கைகளில் பொறித்து வைத்திருக்கிறார், அவரது அன்பு மாறாதது என்று ஓங்கிப் பேசியிருக்கிறார்.

அன்பர்களே, அன்னை தெரேசா பிறந்த நூறாம் ஆண்டை ஆகஸ்ட் 27, இவ்வியாழனன்று நினைவுகூறும் இவ்வேளையில் நாம் செய்ய வேண்டியது என்ன? அன்பு, நேசம், பாசம், கருணை இவை அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாய் வாழ்ந்த அவரின் அன்புப் பாதையைப் பின்பற்றுவதேயாகும். ஏழை எளியவர் தொழுநோயாளர் கைவிடப்பட்டோர் அகதிகள் என அனைவரிலும் அவர் இறைவனைக் கண்டு, தொண்டில் தொடுவானமாக இருந்தது போல நாமும் நம்மோடு வாழ்வோர், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் இறைவனைக் காண வேண்டும். இத்தகையோரின் வெளிப்படையான இரணங்களுக்கு மட்டுமல்ல, உள்காயங்களுக்கும் அன்பெனும் மருந்திட வேண்டும். அதேசமயம் நாம் இந்தக் காயங்களை மற்றவர்களில் ஏற்படுத்தாதிருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் சொன்னது போல, இயேசுவைப் பின்செல்லும் போது நம் இதயங்கள் மகிழ்ச்சியால் ததும்புகின்றன, இவ்வுலகில் நாம் இருப்பதற்கான முழு அர்த்தமும் புரிகின்றது. அதேசமயம் இது துன்பங்களையும் தியாகங்களையும் தருகின்றது, ஏனெனில் இது அடிக்கடி உலகப் போக்குக்கு மாறாக அமைகின்றது.

இந்த இயேசுவின் நிலைத்த புனித யாகம் அன்னை தெரேசா. இவர் சொல்லிச் செய்தது போல, செய்து சொன்னது போல வலிக்கும் வரை நாம் கொடுக்க முடியாவிட்டாலும் சகமனிதரிடத்தில் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும். சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய இந்தப் பூமரம் போன்று, அன்பை அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்குவோம்.



 








All the contents on this site are copyrighted ©.