2009-08-20 10:47:59

வரலாற்றில் ஆகஸ்ட் 21 புனித பத்தாம் பத்திநாதர்


ஜூசப்பே மெல்கியூர் சார்த்தோ என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர், திருச்சபையின் 257 வது திருத்தந்தையாக, 1903 முதல் 1914 வரை திருச்சபையை வழிநடத்தியவர். பாப்பிறை 13ம் சிங்கராயருக்குப் பின்னர் பாப்பிறையானவர். 1572ல் திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் புனிதர் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதாவது ஏறத்தாழ 382 ஆண்டுகளுக்குப் பின்னர் புனிதர் என அறிவிக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவர். அன்னைமரியா மீது மிகுந்த பக்தி கொண்ட திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர், மேய்ப்புப்பணி திருத்தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். இவரது பக்தி வாழ்வும், வாழ்வு முறையும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பிரதிபலித்தன. இத்தாலியின் ரியெசெ நகரில் 1835ம் ஆண்டு பிறந்த இவர் எதையும் நேரிடையாக பேசுவார், அச்சமின்றி கண்டனங்களை எழுப்புவார். எனவே ஐரோப்பாவில் முதலாம் உலகப் போருக்கு முன்னான அதிகார வர்க்க சமூகங்களில் இவருக்கு ஆதரவு இல்லாமல் இருந்தது. கத்தோலிக்க விசுவாசத்தைப் பாதுகாப்பதற்குத் தீவிரமாக உழைத்தவர். இவர் தன்னிலே மிகுந்த பரிவன்பும் நன்மைத்தனமும் ஏழ்மைப் பண்பும் கொண்டவர். மேய்ப்பராக இருக்க விரும்பிய இவர், 20ம் நூற்றாண்டில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மறையுரை வழங்கிய ஒரே திருத்தந்தையாவார். பிறரன்பில் சிறந்து விளங்கினார். எப்படியெனில் 1908ம் ஆண்டில் இத்தாலியின் மெசினாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, இத்தாலிய அரசு செயலில் இறங்கு முன்னரே, அதில் அகதிகளானவர்களுக்கு வத்திக்கானில் அடைக்கலம் அளித்தார். இவர் தனது குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இவரது ஒரு சகோதரர் தபால்நிலையத்தில் கிளர்க்காகவே இருந்தார். இவருக்கு மிகவும் விருப்பமான இவரது மருமகன் குரு ஒருவர், ஒரு கிராமத்தில் சாதாரண குருவாகவே கடைசி வரை இருந்தார். இவரது மூன்று சகோதரிகள் கடும் ஏழ்மையில் உரோமைக்கு அருகில் சேர்ந்து வாழ்ந்தனர் என்று சொல்கிறார்கள். ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே இறக்க விரும்புகிறேன் என்று அடிக்கடி சொல்லும் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர், திருத்தந்தை 12ம் பத்திநாதரால் 1954ல் புனிதராக அறிவிக்கப்பட்டார்.



1567 – ஜெனீவா ஆயரும் புனிதருமான பிரான்சிஸ் தெ சேல்ஸ் பிறந்தார்.

1770 - கேப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பிரிட்டனுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.