2009-08-19 15:32:51

முதல் உலக மனிதாபிமான தினம்


ஆக.19,2009 நலிந்தவர்கள், குரலற்றவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகள் புதுப்பிக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் பணியாற்றும் நிவாரண மற்றும் துயர்துடைப்புப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட முதல் உலக மனிதாபிமான தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.

மனிதாபிமானப் பணிகள் செய்து கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டவர்களையும் இந்நாளில் நினைவுகூர்வதாகவும் கூறும் அவரின் செய்தி, பேரிடர்கள் மற்றும் போர்ப் பகுதிகளில் வேலை செய்யும் போது அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் அவர்களுக்கும் நமது ஆதரவு தேவைப்படுகின்றது என்றும் தெரிவிக்கிறது.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி பாக்தாத் ஐ.நா. தலைமையகம் தாக்கப்பட்ட போது, மாபெரும் மனிதாபிமானப் பணியாளர் செர்ஜோ வியெரா தெ மெலோ உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்நாளின் நினைவாக இந்த உலக மனிதாபிமான தினம் கடைபிடிக்கப்படுவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.

கடந்த ஆண்டில் 122 சர்வதேச நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இது, ஐ.நா.அமைதிப்படையில் இறந்தவர்களைவிட அதிகம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக சொமாலியா நாடு உள்ளது. அங்கு 2008ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 42 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 33 பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்

 








All the contents on this site are copyrighted ©.