2009-08-17 19:17:12

தேம்பாவணிக் காப்பியமும் வீராமாமுனிவரும் . பல்சுவை .


கிறித்தவச் சமயத்தவரால் பெரிதும் போற்றப்படும் காப்பியம் தேம்பாவணியாகும் . தேம்பாவணி இத்தாலிய நாட்டைச் சேர்ந்த பன்மொழிப்புலவர் வீராமாமுனிவரால் 3615 பாடல்களால் புனித சூசையப்பர் , அன்னை மரியாள் , இறைமகன் இயேசு இவர்களின் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனை வளத்துடன் காப்பிய இலக்கணம் அமைய எழுதப்பட்ட காவியமாகும் . இது கத்தோலிக்கச் சமயத்தவரைச் சார்ந்த நூலாகும் .

தேம்பாவணி தேன் போன்ற இனிய அழகிய பாக்களால் அமைந்த நூல் – “தேன் + பா + அணி” என்றும் , வாடாத மாலை போன்ற பல மலர்களால் தொடுக்கப்பட்ட “தேம்பா + அணி” நூல் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது . இந்நூல் முதல் காண்டம் , இரண்டாம் காண்டம் , மூன்றாம் காண்டம் என்று பெயரிடப்படாத மூன்று காண்டங்களையும் , ஒவ்வொரு காண்டத்திற்கும் பன்னிரண்டு படலங்கள் என 36 படலங்களையும் கொண்டுள்ளது.

வீரமாமுனிவர் இளமையில் ஹோமர் , தாந்தே , வெர்ஜில் ஆகியோர் எழுதிய கிரேக்க , இலத்தீன் காவியங்களை நன்கு கற்றார் .தமிழ்க்காவியங்களான சீவக சிந்தாமணி , கம்பராமாயணம் , போன்ற காவியங்களை நன்கு பயின்றார் . அறநூல்களில் சிறந்த திருக்குறளில் ஈடுபாடு கொண்டார் . அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் .

ஸ்பெயின் நாட்டில் ஆகிர் என்ற சிற்றூரில் இயேசுவின் பக்தரும் இளம் துறவியுமான மரி என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவருடைய கனவில் அன்னை மரியாள் தோன்றி தம் கணவராகிய சூசையப்பரின் வரலாற்றைக் கூறினார் . துறவியான மரி “இறை நகரம்” என்ற நூலை எழுதினார் . அந்த நூலையே முதல் நூலாகக் கொண்டு தேம்பாவணி காவியத்தைத் தமிழகத்தில் உள்ள கோணான்குப்பம் என்ற ஊரிலிருந்து எழுதினார் என்று கூறப்படுகிறது.





“பேரருள் கடலாய்ப் பெரும்புகழ் மரியென்பாள்

தேரருள் காட்டச் சிறப்பொடு முன்னாள்

வான்வாழ் மொழியொடு மலருமிழ் மதுவெனத்

தான்வாழ் உவப்பொடு தந்த திருக்கதை

மறைமொழி வாயினன் மலிதபத்து இறைவன்

நிறைமொழிக் குரவன் நிகரில் கேள்வியன்

வீரமா முனியென்போன் வியன்தமி ழாக

நீரளாம் உலகெழ நீர்த்துரைத் தனன்



என்று பாவுரைப் பதிகம் கூறுகிறது .தேம்பாவணி காவியத்தில் 105 திருமறைப் பின்னணிச் செய்திகளைக் காண முடிகின்றது . சூசையப்பர் , மரியாள் , திருமகன் இயேசுவின் பிறப்பு , இளமை, வளர்ச்சி , துறவு நிலை , சூசையப்பர் மரியாள் இவர்களின் திருமணம் , திருமணம் நடந்த முறை , ஈரறம் இணைந்த ஓரறம், எகிப்தில் ஏழாண்டு வாழ்க்கை , இயேசுவின் 26 ஆவது வயதில் தந்தை சூசையப்பரின் மரணம் , பேயின் தந்திரங்கள் , நரகம் , இருள் , உயிர்த்தெழுதல் , பாதாளம் , விண்ணுலகு , இயேசு சூசை இவர்களின் உயிர்ப்பு , சூசைக்கு ஆலயம் அமைத்தல் போன்ற பல புதிய செய்திகளையும் , விளக்கங்களையும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது . மரியாள் திருமணமாகும் முன்னும் , கருவுற்ற காலத்தும் இயேசுக் குழந்தையைப் பெற்ற பின்னரும் தன் கன்னிமை குன்றாதிருந்த இறைத்தன்மையை அறிய முடிகின்றது . புறாவும் வேடனும் என்ற கதை தேம்பாவணியில் காணப்படுகின்றது .

தமிழ் மண்ணில் பிறந்து , தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பலருக்கு இல்லாத தமிழறிவு , தமிழ்ப்புலமை ,தமிழ்ப்பற்று, தமிழ் உணர்வு , தமிழ்ப்பண்பாடு , வீரமாமுனிவரிடத்தில் காணலாம் .

இவருடைய தமிழ்ப்பணியை ஜி .யு . போப் , கால்டுவெல் , உ.வே . சாமிநாதர் ஐயர் , அருள் தந்தை ஞானப்பிரகாசம் , சுத்தானந்த பாரதி , இரா. பி. சேதுப்பிள்ளை , அ.சிதம்பரநாதனார் தெ.பொ.மீ. , அருள்தந்தை மா. இராசமாணிக்கனார் , கி.ஆ.பெ. விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர் .



வீரமாமுனிவர் வரலாறு

வீரமாமுனிவர் கத்தோலிக்கத் திருமறையின் தலைமை இடம் என்று அழைக்கப்படும் இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் காஸ்திலியோன் என்ற சிற்றூரில் கொண்டல் போபெஸ்கி மற்றும் எலிசபெத்து என்ற பெற்றோருக்கு செல்வக்குடும்பத்தில் 1680 ஆம் ஆண்டு , நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் பிறந்தார் . பெற்றோர் இவருக்கு கான்ஸ்டான்சியுஸ் பெஸ்கி எனப் பெயரிட்டனர். பெஸ்கி என்பது குடும்பப் பெயராகும் .

இவர் இளமையில் இத்தாலி மொழி கற்றுத் தேர்ந்தார் . இயேசு பெருமானின் அருள் கொண்டவராக விரும்பினார் . தம் 18 ஆம் வயதில் துறவறத்தை மேற்கொண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1706 திருமறையின் இறையியல் படிப்பைப் கற்கத் தொடங்கி நான்கு ஆண்டுகள் பயின்றார் . பின்னர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் . சமயப்பணி புரிய தமிழ் மண்ணுக்கு 1711 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 3 ஆம் நாள் வந்து சேர்ந்தார். இவர் கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், பிரஞ்சு, பார்சி, இந்துஸ்தானி முதலிய மொழிகளிலும் இந்திய வடமொழிகளிலும் புலமை பெற்ற பன் மொழிப்புலவராவார் .

தம் பெயரைத் தைரியநாதன் என்று தாமே பெயர் மாற்றம் செய்து கொண்டார் . தமிழ் நாட்டுத்துறவி போல் காவியுடை உடுத்தி வெள்ளைப்பாகை அணிந்தார். காதில் கடுக்கனும் , விரலில் மோதிரமும் அணிந்து புலித்தோல் விரித்து அமர்ந்தார். சைவ உணவே உண்டார். பேச்சால் நடையால் உடையால் பழக்க வழக்கங்களால் தமிழராகவே விளங்கினார் . தமிழ் அறிஞர்கள் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர் .

வீரமாமுனிவர் திருக்குறளை விரும்பிக்கற்றார் . 1730 ஆம் ஆண்டு திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார் . பல தமிழ் இலக்கிய நூல்களைக் கற்ற இவர் 3615 பாடல்களில் மூன்று காண்டங்களாக முப்பத்தாறு படலங்களை அமைத்துத் “தேன் போன்ற பாக்கள் ” என்றும் “வாடாத மாலை ” என்றும் பொருள்தரும் “தேம்பாவணி” என்னும் அருமையான காப்பியத்தை இயற்றினார் . கவிதை நூல்கள் எட்டும் , உரைநடை நூல்கள் , இலக்கண நூல்கள் , சதுர் அகராதி போன்றவை இருபத்தேழும் ஆக முப்பத்தைந்து நூல்களை எழுதியுள்ளார் .தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தங்களைச் செய்தார். அவர் எழுதிய உரைநடை நூல்களில் நகைச்சுவை மிகுந்த பரமார்த்த குரு கதை குறிப்பிடத் தக்கதாகும் .

1733 ஆம் ஆண்டு திருச்சியில் தாஸ்ட் அலியின் மருமகன் சந்தா சாகிபு படைத் தலைவராய்ப் பணி ஏற்றார். இவர் வீராமுனிவருக்குத் திவான் பதவியும் , உக்களூர் , மால்வாய் , அரசூர் , நல்லூர் ஆகிய நான்கு கிராமங்களின் வருவாயும் , ஊர்வலம் செல்வதற்குப் பல்லக்கும் அளித்தார். வெண்சாமரை வீச , குடைபிடிக்க , இருவர் இருந்தனர் . மயில் தோகைச் சாமரங்கள் தூக்க , குதிரைகள் முன் நடக்க , மூன்று ஒட்டகங்கள் பின் தொடர இசை ஒலிக்கச் செல்வார் . இவ்வாறு 1736 முதல் 1740 வரை நான்கு ஆண்டுகள் திவானாகப் பணி ஆற்றினார் .

வீரமாமுனிவர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார் . மூலிகை மருந்துகளால் நோய்களைக் குணப்படுத்தும் திறன் பெற்றிருந்தார்.

1746 ஆம் ஆண்டு அம்பலக்காட்டின் கத்தோலிக்க ஆலயத்தின் குருவானவராகப் பொறுப்பேற்றார் . 1747 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4 ஆம் நாள் தம் 66 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார் . 1680 ஆம் ஆண்டு தோன்றிய இவர் 1710 வரை முப்பது ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்தார் . 1711 ஆம் தமிழகம் வந்தார். 37 ஆண்டுகள் தமிழராக , தமிழ் உணர்வு மிக்கவராக , தமிழ்க்கவிஞராக , சமய , சமூக , அரசியல் தொண்டராகப் பணியாற்றினார் . தமிழறிஞர் பலரின் வாழ்த்துதலையும் , புகழுரைகளையும் பெற்றார். இவர் இன்று புகழோடு வாழ்ந்து வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.