2009-08-15 13:49:11

குருக்கள் இறைவனுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிப்பது அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது, பாங்காக் கர்தினால்


ஆக.15,2009 குருக்கள் இறைவனுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிப்பது அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது என்று பாங்காக் கர்தினால் மிக்கேல் மிக்காய் கிட்புஞ்சு கூறினார்.

பாங்காக் உயர்மறைமாவட்டத்தில் குருக்கள் ஆண்டை தொடங்கி வைத்து மறையுரையாற்றிய கர்தினால் கிட்புஞ்சு, குருக்கள் திருச்சபைக்கும் உலகுக்கும் மிகுந்த பணிவுடன் சேவை செய்து மேய்ப்புப் பணிகளை பிறரன்புடன் ஆற்றுமாறு வலியுறுத்தினார்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய தாய்லாந்துக்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் சால்வத்தோரே பெனாக்கியோ, இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருந்து அவரது பணியைத் தொடர்ந்து செய்வதே குருத்துவ அழைத்தலின் சாரம் என்று கூறினார்.

குருத்துவம் ஒரு சிறப்பு கொடை என்றும் குறிப்பிட்ட பேராயர் பெனாக்கியோ, கற்பு, ஏழ்மை, பணிவு ஆகிய வார்த்தைப்பாடுகளால் தங்களை அர்ப்பணித்துள்ள ஆண் துறவிகள், பிரதிபலன் பாராமல் பிறருக்குத் தங்களையே அர்ப்பணிக்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.

பங்கு குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு கடந்த ஜூன் 19ம் தேதி சர்வதேச குருக்கள் ஆண்டை தொடங்கி வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.












All the contents on this site are copyrighted ©.