2009-08-11 18:28:45

விவிலியத் தேடல் நிகழ்ச்சி . இயேசு புரிந்த முதல் புதுமை. 120809 .


விவிலியத் தேடல் நிகழ்ச்சி . இயேசு புரிந்த முதல் புதுமை என நாம் கூறும் அருஞ்செயல் . தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புத நிகழ்ச்சி .

இதை நாம் திருத்தூதர் யோவான் நற்செய்தியில் காண்கிறோம் .

யோவான் (அருளப்பர்) நற்செய்தி அதிகாரம் 2 . 1 – 11 .

1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.



கானா ஊர் இயேசுவின் சீடர் நத்தனேயலின் ஊர் . பிலிப்பு , மற்றும் நத்தனேயலின் அழைப்பின் பேரில் மூன்று நாட்களுக்குப் பிறகு இயேச அங்குச் சென்றார் . அங்கிருந்த விருந்தினரில் இயேசுவின் தாயாரும் அங்கிருந்ததாக நற்செய்தி கூறுகிறது . அக்காலத்தில் திருமண விழா 7 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் . அதுபோது விருந்தோடு நல்ல திராட்சை ரசமும் தாராளமாகப் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்தது . எதிர்பாராதவிதமாக அவ்விருந்தில் ரசம் தீர்ந்தபோது இயேசுவின் அன்னை மரியாள் தம் மகனின் இறைக்குழந்தை என்பதை அறிந்திருந்ததால் விருந்தில் ரசம் தீர்ந்துவிட்டது என்று சொல்லி சூசகமாக புதுமையை நிகழ்த்தி ரசத்தை உண்டாக்கிக் கொடுக்குமாறு தெரிவித்தார் . புதுமை நிகழ்த்தக்கூடிய நேரம் இன்னும் வரவில்லையென்று இயேசு தம் தாயிடம் கூறுகிறார் . இருப்பினும் தாய் சொல்லைத் தட்டாத மைந்தன் தண்ணீரை சுவைமிக்க திராட்சை ரசமாக மாற்றிக் கொடுத்தார் . விருந்தில் பங்கேற்று புதிதாகப் பரிமாறப்பட்ட ரசத்தின் சுவையை உணர்ந்து இந்த புதிய ரசம் மிகவும் பிரம்மாதம் என்று வாயாரப் பாராட்டினார்கள் .

சிலர் புதுமைகளை , அதுவும் நற்செய்தியில் வரும் புதுமைகளை நம்புவதுமில்லை . ஏற்றுக் கொள்வதுமில்லை . நாம் வாழும் இக்காலத்தில் இயேசு புரிந்த அத்தனை புதுமைகளும் நடந்து வருவதைப் பார்க்கும்போது இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆழமான இறை நம்பிக்கையோடு கேட்பது கிடைக்கும் என்பதைச் செய்து காட்டியிருக்கிறார் . இன்றும் ஆலயங்களிலும் மருத்துவ மனைகளிலும் தனியாரின் உருக்கமான நம்பிக்கை மிக்க வேண்டுதல் காரணமாகவும் கடவுள் புதுமைகளை நிகழ்த்தி வருவது கண்கூடாக இருப்பதாக பல அறிவியலார் தெரிவிக்கின்றனர் . நற்செய்தியில் வரக்கூடிய பல புதுமைகள் முந்நாட்களில் நம்பமுடியாதவை எனக் கூறப்பட்டவை தற்போது நம்பிக்கைக்குரியவை எனத் தெரிவிக்கப்படுகின்றன .

சில புதுமைகள் மிகவும் சிரமமானவை . நற்செய்தியாளர் யோவான் நிகழ்ந்ததை தத்ரூபமாக வருணிக்கிறார் . நிகழ்ச்சியை மையப்படுத்திக் காட்டி நிகழ்ச்சியின் கதாநாயகரான இயேசுவின் போதனையையும் தெளிவுபடுத்துகிறார் . நிகழ்ச்சியில் கொஞ்சமும் சந்தேகம் காட்டாத திருத்தூதர் யோவான் நிகழ்ச்சியில் கருத்தூன்றி லயித்துவிடாது நிகழ்ச்சியின் வாயிலாக இயேசுவின் வல்லமையும் சக்தியும் வெளிப்படுவதைத் தெளிவாக்குகிறார் . வெளிப்புற புதுமைகள் – அதாவது தண்ணீர் ரசமாவது , அப்பம் பலுகுவது , லாசர் இறந்தபிறகு உயிரோடு எழுப்பப்படுவது போன்ற புதுமைகளில் இயேசு மனிதர்களின் உள்ளத்தாகத்தைத் தீர்த்து வைக்கும் சக்தி கொண்டவர் என்பதையும் தெளிவாக்குகிறார் . அவரது குரலொலி கடுமையான பாவியையையும் மன மாற்றம் செய்யும் வல்லமையுள்ளது என்பதைக் காட்டுகிறது . இப்படி இயேசுவின் இறைத் தன்மையை புதுமைகளின் வாயிலாக நற்செய்தியாளர் யோவான் வெளிக்காட்டுகிறார் . திருத்தூதர் யோவான் இயேசுவின் நெருங்கிய சீடர் . இயேசுவோடு முக்கியமான நிகழ்வுகளின் போது அவர் அருகிலேயே இருந்தவர். எனவே அவருடைய நற்செய்தியின் முதல் அணிந்துரையாக இன்று நாம் பார்க்கும் புதுமையை இயேசுவின் முதல் புதுமையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் . எவ்வாறு இயேசு மக்களின் துன்பங்களில் பங்கு கொள்கிறார் என்பதை யோவான் காட்டுகிறார் . முக்கியமாக எவ்வாறு இயேசு நிகழ்வுகளில் மனிதருக்குச் சிறப்புச் செய்கிறார் , மனித மாண்பைப் போற்றுகிறார் எனக் காட்டுகிறார் . தண்ணீர் ரசமாவது போல , திருமண வீட்டுக்காரருடைய தர்ம சங்கடமான நிலைமை மிகுந்த மகிழ்ச்சிகரமானதாக மாறுவதைக் காண்கிறோம். மகிழ்சியும் பெருமையும் நிறைந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளாக புதுமை நிகழ்ச்சிகள் ஜொலிக்கின்றன .

மற்றும் பல முக்கியமான காரியங்களை நாம் கவனிக்க வேண்டும் . இயேசுவை வரவழைத்திருக்கிறார்கள் . அவர் ஓர் புதிய தலைவராக இருந்தாலும் மக்களோடு சகஜமாகப் பழகுவார் என்பது தெரியவருகிறது . அவர் உணவு உண்ணும் மேசையில் மக்கள் கலகலப்பாகப் பேசமுடியும் என்பது தெரியவருகிறது. இயேசு மகிழ்ச்சி மிக்கவர் மகிழ்ச்சியை பரிமாறுகிறவர் என்பதையும் இன்றைய புதுமை நாசூக்காகக் காட்டுகிறது .

இன்னும் பல அதிசயங்களைக் கொண்ட இந்தப் புதுமையைப் பற்றி மீண்டும் நாம் ஆழமாக ஆராய்ச்சி செய்வோம் .








All the contents on this site are copyrighted ©.